நெல்லை: கொரோனா தொற்று பொதுமுடக்கம் காரணமாக மூடப்பட்ட குற்றால அருவியில் பொதுமக்கள் குளிக்க சுமார் 9 மாதங்களுக்கு பிறகு  கடந்த 15ந்தேதி (டிசம்பர் 15ந்தேதி) முதல் மீண்டும்  குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், தற்போது அருகளில் நீர்வரத்து அதிகமாக உள்ளதால், 3 நாளில் மீண்டும் குளிக்க சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய் தொற்று காரணமாக தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.  இதனால் கடந்த 9 மாதங்களாக குற்றாலம் ஆள்வரமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. பின்னர் கொரோனா முடக்கத்தில் வழங்கப்பட்ட தளர்வுகள் காரணமாக, டிசம்பர் 15ந்தேதி முதல், குற்றாலத்தில், குளிக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டது.

ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றாலம் அருவி ஆகியவற்றில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டநிலையில், உடல்வெப்ப சோதனை நடத்திய பிறகே, அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டன. தொடர்ந்து  நேர கட்டுப்பாடும் விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது அருவிகளில் குளிக்க தடை போடப்பட்டு உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரிப்பால் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர் வரத்து அதிகம் உள்ளதால் தண்ணீரில் பாறாங்கற்கள் அடித்து கொண்டு வரும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்ட 3 நாளில் மீண்டும் பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.