வெள்ள நிவாரண நிதி ரூ. 1000 கோடியை தாண்டியது : கேரள நிதி அமைச்சர்

திருவனந்தபுரம்

கேரள வெள்ள நிவாரண நிதி ரூ. 1000 கோடியை தாண்டி உள்ளதாக கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் தெரிவித்துள்ளார்.

கனமழை காரணமாக கேரள மாநிலத்தில் கடும் வெள்ளம் ஏற்பட்டது,  பல லட்சம் பொதுமக்கள் தங்கள் இல்லம் உள்ளிட்ட பல சொத்துக்களை இழந்துள்ளனர்.   தற்போது மழை குறைந்துள்ளபடியால் நிவாரணப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.   வெள்ள நிவாரண நிதியாக மத்திய அரசும் மாநில அரசுகளும் நிதி உதவி அளித்துள்ளன.  பல  பொதுமக்கள் நிவாரணப் பொருட்கள் அளித்துள்ளனர்.

இந்நிலையில் கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் தனது டிவிட்டரில், “முதல்வர் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ, 1000 கோடிக்கு மேல்நிதி வந்துளது.   உலகெங்கும் உள்ள பலரும் கேரள மக்களுக்கு தஙக்ள் நிதி உதவியை அளித்துள்ளனர்.   ஏற்கனவே பலர் அளித்துள்ள வாக்குறுதியின் படி இந்த நிதி உதவி ரூ. 2000 கோடியை தாண்டும் என நம்புகிறேன்.  இது நாட்டின் வரலாற்றிலேயே குறிப்பிடத்தக்கதாகும்” என பதிந்துள்ளார்.

கேரள அரசு வெளியிட்டுள்ள தகவலின் படி சுமார் 4.17 லட்சம் பேர் நிதி உதவி அளித்துள்ளதாகவும்,  இதுவரை ரூ.,1027 கோடி ரூபாய் நிதி உதவி வந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.