யமுனை நதியில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம்: டில்லிக்கு ஆபத்து…?

டில்லி:

முனை நதியில் அபாய கட்டத்துக்கும் மேல் வெள்ளம் செல்வதால், தலைநகர் டில்லியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வட இந்தியாவின் பல பகுதிகளில் பெய்து வரும்  தொடர் கனமழை காரணமாக யமுனா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நிலையில், யமுனை ஆற்றில் வெள்ளம், அபாய கட்டத் தையும் தாண்டி அதிகரித்துள்ளதால், டில்லிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வட இந்தியாவின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. டில்லி, அரியானா, இமாச்சலப் பிரதேசம், உத்தரப்பிரதேசம்  போன்ற மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்மழை கொட்டி வருகிறது.

இதன் காரணமாக பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. சாலைப்போக்குவரத்து முடங்கி உள்ளது. அரியானா மாநிலத்தில் பெய்து வரும் பேய் மழை காரணமாக யமுனா ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

தலைநகர் டில்லி பகுதிகளில் அபாய கட்ட அளவை தாண்டி யமுனை ஆற்றில்  வெள்ளம் செல்வதால் தாழ்வான பகுதியில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை வெளியேற்றும் பணியில் மாநில அரசு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

அரியானாவிலுள்ள ஹத்னி குந்த் தடுப்பணையில் நீரின் அளவு 204.92 மீ அளவாக உள்ள நிலையில், அபாயகட்ட அளவை எட்ட இன்னும் 0.09 மீ அளவே உள்ளதால் யமுனா ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இன்றைய காலை நிலவரப்படி ஹத்னி குந்த் தடுப்பணையிலிருந்து சுமார் 1,87,272 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக  நகர் முழுவதும்   அதிகாரிகள் தயார் நிலையில் இருக்குமாறு வெள்ளக்கட்டுபாடு துறை உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே வானிலை ஆய்வு மையம் உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், இமாச்சலப்பிரதேசம், டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த 2 நாள்களுக்கு கன மற்றும் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளதால் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.