கனமழை: ஜம்முவில் 3பேர் உயிரிழப்பு – காஷ்மீருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கனமழையால் ஜம்மு பகுதியில் 3 பேர் உயிரிழந்தனர். காஷ்மீரில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை தெற்கு காஷ்மீர் பகுதிகளில் தொடங்கிய கனமழையை தொடர்ந்து சனிக்கிழமை மத்திய காஷ்மீர் மற்றும் ஸ்ரீநகர் பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. இதில் 12க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
kashmir
தொடர் கனமழை காராணமாக காஷ்மீர் பள்ளதாக்கு பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது. ராம் முன்ஷி பாக் பகுதியில் உள்ள சாலையில் 18 அடிக்கு உயர்ந்த வெள்ளப்பெருக்கு சனிக்கிழமை காலை 10 மணிக்கு 20.87 அடியை எட்டியது என்று வெள்ளப்பெருக்கு கட்டுப்பாட்டுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜீலம் ஆறு மற்றும் தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு இயற்கை பேரிடர் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. பாதிப்பிற்குள்ளான மத்திய காஷ்மீர் பகுதிகளில் வெள்ள நிவாரண பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து ஸ்ரீநகர் துணை ஆணையர் கூறுகையில் “தெற்கு காஷ்மீரில் உள்ள சங்கம் பகுதியில் 21அடிக்கும் மேலாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து அப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது” என்று கூறினார்.

காஷ்மீரில் தொடர்ந்து மூன்று நாட்களாக மழைப்பொழிவு மற்றும் மோசமான வானிலை நிலவி வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமையில் இருந்து மெல்ல மெல்ல மழையின் அளவு குறைந்து விடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.