அமெரிக்காவை புரட்டிப்போட்ட புளோரன்ஸ் புயல்: குழந்தை உள்பட 5 பேர் பலி

புளோரிடா:

மெரிக்காவை புரட்டிப்போட்ட புளோரன்ஸ் புயல் காரணமாக பஞ்சிளங்குழந்தை உள்பட 5 பேர் பலியாகி உள்ளனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால், 1.5 லட்சம் மக்கள் தவித்து வருகின்றனர்.

அமெரிக்காவில் மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில், அட்லாண்டிக் கடல் பகுதியில் உருவான புளோரன்ஸ் புயல் அமெரிக்காவின் கிழக்கு பகுதியை நோக்கி வந்தது. இந்த புயல் அடுத்த 48 மணி நேரத்தில் அமெரிக்காவை தாக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அதன்படி நேற்று மாலை அமெரிக்காவின் கடலோர பகுதிகளை புளோரன்ஸ் புயல் தாக்கியது. இதன் காரணமாக  பலத்த காற்று வீசியதால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் 1.5 லட்சம் மக்கள் இருளில் தவிக்கின்றனர்.

அமெரிக்காவின் வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, விர்ஜினியா ஆகிய மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த புயல் மோசமான விளைவு களை ஏற்படுத்தி உள்ளது.

புயல் காரணமாக 3 மாகாணத்திலும் கடலோர பகுதி மக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். கடற்கரை பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 1500க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இந்த நிலையில் புளோரன்ஸ் புயல் கடலோர பகுதிகளில் 100 கிமீ வேகத்தில் தனது தாக்குதலை நடத்தி சூறையாடியது. புயலின்போது வீசிய வேகமான காற்றால் ஆக்ரோஷமாக எழுந்த கடல் அலைகள், கரையோர பகுதிகளை தாக்கியது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் கடல் நீர் புகுந்தது.

இதன் காரணமாக சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். காற்றின் வேகம் மற்றும் அலைகளின் தாக்கத்தினால் படகு குழாம்கள் சேதமடைந்துள்ளன.  இந்த புயல் தற்போது வலுவிழந்து முதலாம் வகை புயலாக மாறியிருப்பதாக கணிக்கப்பட்டிருந்தாலும், பொதுமக்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்கும்படி மாநில கவர்னர் அறிவுறுத்தி உள்ளார்.

கடந்த ஆண்டு ஹூஸ்டனில் ஹார்வே புயல் ஏற்படுத்திய தாக்கத்தைப் போன்று இந்த புயலும் பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த புயலுக்கு பச்சிளங்குழந்தை உள்பட 5 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.