ஃப்ளோரிடா : வீடியோ கேம் போட்டியில் துப்பாக்கி சூடு : மூவர் மரணம்

ஜாக்சன்விலே, ஃப்ளோரிடா

ஜாக்சன்விலே நகரில் நேற்று ஒரு வணிக வளாகத்தில் நடந்த வீடியோ கேம் போட்டியில் நடந்த துப்பாக்கி சூட்டில் இருவர் மரணம் அடைந்து, 9 பேர் காயமடைந்துள்ளனர்   சுட்டவரும் தற்கொலை  செய்துக் கொண்டுள்ளார்.

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ள நகரம் ஜாக்சன்விலே.   இந்த நகரில் அமைந்துள்ள ஒரு வணிக வளாகத்தில் பல கடைகள், உணவு விடுதிகள், பார்கள் உள்ளிட்ட பலவும் உள்ளன.   செயிண்ட் ஜான் நதியின் கரையில் அமைந்துள்ள இந்த வளாகத்தில் எப்போதும் கூட்டம் அலை மோதுவது வழக்கம்.

இங்கு அமைந்துள்ள ஒரு வீடியோ விளையாட்டு அரங்கில் நேற்று ஒரு கால்பந்து போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது.   மேட்டன் என் எஃப் எல் சாம்பியன் ஷிப் போட்டியில் மேட்ட்ன் என் எஃப் எல் 19 பிரிவுக்கான போட்டி நடைபெற்றுக் கொண்டு இருந்தது.    இதைக் காண ஏராளமான ரசிகர்கள் கூடி இருந்தனர்.

அப்போஒது திடீரென ஒருவர் அங்கு இருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார்.     இதனால் கடும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.     இந்த துப்பாக்கி சூட்டில் இருவர் மரணம் அடைந்துள்ளனர்.    சுமார் ஒன்பது பேர் காயமுற்றுள்ளனர்.    அது தவிர  இருவர் சிறு காயங்களுடன் தப்பி ஓடி உள்ளனர்.

காயமடைந்து மருத்துவமனையில் 6 பேர் சேர்க்கபட்டுள்ளனர்.  அவர்கள் அனைவரும் 20 லிருந்து 35 வயதான இளைஞர்கள் ஆவார்கள்.   அதில் ஒருவர் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.     இது தவிர மூவர் சிறு காயங்கள் அடைந்ததால் சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

துப்பாக்கியால் சுட்டவர் அருகில் இருந்த மற்றொரு கடைக்கு சென்று தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.   இவர் பெயர் டேவிட் காட்ஸ் எனவும் இவர் மேரிலாண்டை சேர்ந்த 24 வயது இளைஞர் எனவும்  அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கி சூடு சம்பவம் அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.