அகமதாபாத்:

குஜராத் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 2 கட்டங்களாக நடக்கிறது. இதில் முதல் கட்டமாக தேர்தல் நடக்கும் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. இந்த பட்டியல் வெளியான ஒரு மணி நேரத்தில் இதற்கு எதிர்ப்பு குரல் கிளம்பியுள்ளது. கட்சி பதவியில் இருந்து ராஜினாமா செய்யும் சம்பவங்களும் நடக்க தொடங்கிவிட்டது.

பாருச் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் விஜய்சின் படேல் தனது கட்சி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அன்கிலேஷ்வர் தொகுதியில் தற்போதைய எம்எல்ஏ.வான இஸ்வர்சின் என்பவருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டதுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த முடிவை அவர் அறிவித்துள்ளார். இவர்கள் இருவரும் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் பாஜக ஏற்கனவே பட்டிதார் வாக்கு வங்கியை இழந்துள்ள சவுராஸ்டிரா பகுதியில் மகுவால ஜாஸ்டன் தொகுதிகளில் உட்கட்சி எதிர்ப்பும் தற்போது தலை தூக்கியுள்ளது. மகுவா தொகுதியில் தற்போதைய எம்எல்ஏ ராகவ்ஜிபாய் மக்வானாவுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து கவுன்சிலர் பிபின் சங்வி கட்சியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

சங்வி கூறுகையில், ‘‘கடந்த 4 முறையாக நான் வாய்ப்பு கேட்டு வருகிறேன். இந்த தொகுதியில் பாஜக.வை வளர்க்க நான் கடுமையாக பணியாற்றியுள்ளேன். கட்சி மீது நம்பிக்கை இழந்ததால் ராஜினாமா செய்யும் முடிவை எடுத்துள்ளேன்’’ என்றார்.

இதற்கு அருகில் உள்ள ஜாஸ்டான் தொகுதியில் வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் இடம்பெறாததால் கஜேந்திர ரமணி என்பவர்கள் கட்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். காங்கிரஸ் வசம் உள்ள இந்த தொகுதியில் ரமணிக்கு பதிலாக பரத் போக்ரா என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் காங்கிரஸ் கட்சியில் சேர போவதாக ரமணி அறிவித்துள்ளார்.

மத்திய குஜராத்தில் காங்கிரஸ் கட்சி வசம் உள்ள வதோதரா மாவட்ட பஞ்சாயத்தில் எதிர்கட்சி தலைவராக உள்ள கமலேஷ் பார்மர், பாஜக.வில் இருந்து விலக போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். அதோடு இவர் பத்ரா தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தினேஷ் படேலை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட போவதாகவும் அறிவித்துள்ளார். இந்த தொகுதியில் தினேஷ் படேல் இரண்டு முறை எம்எல்ஏ.வாக வெற்றி பெற்றுள்ளார்.

மலை வாழ் மக்களை உள்ளடக்கிய தெற்கு குஜராத்தில் பாஜக ஆதரவு தெரிவித்துள்ள ஆதிவாசி ஏக்தா மஞ்ச் முன்னணி 10 வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட போவதாக அறிவித்துள்ளது. வேட்பாளர் பட்டியலில் எங்களது தலைவர்களுக்கு போதுமான பிரதிநிதித்துவம் கொடுக்கவில்லை என்று அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

.