தர்மபுரி:

திமுக கூட்டணி கட்சி வேட்பாளரான அன்புமணி ராமதாஸ் போட்டியிடும் தர்மபுரி தொகுதியில், தேர்தல் பறக்கும் படையினர்  பஸ்சில் அனாதையாக கிடந்த  ரூ.3.47 பணத்தை பறிமுதல் செய்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுக்க எடுத்து வந்திருக்கலாம் என்றும், தேர்தல் அலுவலர்கள் சோதனையிட வருவதை அறிந்து, பணத்தை எடுத்து வந்தவர்கள் பஸ்சிலேயே போட்டுவிட்டு எஸ்கேப் ஆகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழகத்தில் வரும் 18ந்தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது.

அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்தும், தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டும்  தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

தேர்தல் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடத்தப்படும் என்று அறிவித்துள்ள தேர்தல் ஆணையம் தேர்தலில் முறைகேடுகள் நடைபெறா வண்ணம் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக கோடிக்கணக்கான பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், திருவண்ணாமலையில் இருந்து தர்மபுரி சென்ற அரசு பேருந்தில் தருமபுரி மாவட்டம் அரூர் அருகே சென்ற போது, பஸ்சினுள் கேட்பாரற்று சில பைகள் குறித்து தேர்தல் ஆணையத்துக்கு புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தேர்தல் அலுவலர்கள், பஸ்சினுள்   7 பைகளில் வைக்கப்பட்டிருந்த ரூ.3.47 கோடியை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றி  அதனை அரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

பணத்தின் சீரியல் நம்பர்களை வைத்து அது எந்த வங்கியில் யார் கணக்கில் இருந்து எடுக்கப் பட்டது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுக்க எடுத்து வரப்பட்டதாக கூறப்படுகிறது.