டில்லி:

ரூ1,000 கோடி மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் இருந்து பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவை விடுவிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

1990-ம் ஆண்டு முதல் 1997 வரை பீகார் முதல்வராக லாலு இருந்தபோது மாட்டுத் தீவனம் வாங்கியதில் ரூ1000 கோடி ஊழல் செய்ததாக புகார் எழுந்தது.  மாட்டுத் தீவன ஊழல்கள் தொடர்பாக அறுபதுக்கும்  மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் லாலு பிரசாத் யாதவ் மீது மட்டும் 5 வழக்குகள் தொடுக்கப்பட்டன.
இதில் ஒரு வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என 2013-ம் ஆண்டு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மற்றொரு வழக்கில் லாலுவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு   லாலு ஜாமீனில் வெளியே வந்தார். அத்துடன் உச்சநீதிமன்றத்தில் சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தார்.

இதற்கிடையே லாலு மீதான வழக்கு ஒன்றில் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் அவரை விடுவித்து குற்றச்சாட்டுகளை ரத்து செய்தது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ. மேல்முறையீடு செய்தது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 20-ந் தேதி தீர்ப்பை ஒத்தி வைத்தது. இந்நிலையில்  இந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

லாலு மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக் கூடாது என்ற சிபிஐ வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. .. லாலு பிரசாத் யாதவ் வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.