நாடு முழுவதும் கொரோனா பரவல் முன்னெப்போதும் கண்டிராத பெரும் சீரழிவை ஏற்படுத்தி வருகிறது.

ஆக்சிஜன் பற்றாக்குறை தலைநகர் டெல்லியில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களையும் விட்டுவைக்கவில்லை.

அகில இந்திய இளைஞர் காங்கிரஸார் பிலிப்பைன்ஸ் தூதரக அதிகாரிகளிடம் நேற்று ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்கினர்.

இதனை தொடர்ந்து இன்று காலை, நியூஸிலாந்து தூதரக அதிகாரிகள், காங்கிரஸ் கட்சியினரை ட்விட்டரில் தொடர்பு கொண்டு, தங்கள் நாட்டு தூதரகத்தில் உள்ள நோயாளிகளுக்கு உடனடியாக ஆக்சிஜன் சிலிண்டர் தேவைபடுகிறது என்று பதிவிட்டனர்.

இந்த பதிவை, மேற்கோள் காட்டி இந்தியாவில் அரசாங்கம் நடக்கிறதா இல்லையா ? வெளிநாட்டு தூதரகங்கள் எதற்காக எதிர்கட்சியினரிடம் உதவி கேட்கின்றன என்று இந்தியா டுடே பத்திரிக்கையின் செய்தியாளர் ராகுல் கன்வல் கேள்வி எழுப்பி இருந்தார்.

சிறிது நேரத்தில் நியூஸிலாந்து தூதரகம் இந்த பதிவை நீக்கியது. மற்றொரு பதிவிட்ட நியூஸிலாந்து தூதரகம், “நாங்கள் உதவி வேண்டும் என்று பதிவிட்டது தவறாக புரிந்துகொள்ளப் பட்டுள்ளது” என்று விளக்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தப் பதிவை பார்த்த காங்கிரஸ் கட்சியினர், நியூஸிலாந்து தூதரகத்திற்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்கி உதவி செய்தனர்.