லாக்டவுனில் இந்திய மக்கள் குறைவான உணவையே சாப்பிடுகின்றனர்: சுகாதாரத்துறை ஆய்வில் தகவல்

டெல்லி: லாக்டவுனில் இந்திய மக்கள் குறைவான உணவையே சாப்பிடுகின்றனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா லாக்டவுன் இந்திய வீடுகளில் உணவுப் பாதுகாப்பின்மையைத் தூண்டியுள்ளது, மக்கள் முன்பை விட குறைவாக சாப்பிடுகிறார்கள், உணவைத் தவிர்த்து விடுகிறார்கள் என்று சுகாதார அமைச்சகத்தின் கணக்கெடுப்பில் தெரிய வந்திருக்கிறது.

கிட்டத்தட்ட 44 சதவீதம் பேர் தங்களது அன்றாட உணவு உட்கொள்ளலைக் குறைப்பது அல்லது ஒரு வேளை உணவை தவிர்த்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம், மக்கள் நோயை பற்றிய தெளிவு இல்லாமை, எதிர்கால அச்சம், லாக்டவுன் பற்றி தெரியாதது ஆகியவையே ஆகும்.

கணக்கெடுப்பின் போது, 31 சதவீதம் பேர் மட்டுமே பணமாகவோ அல்லது வகையாகவோ நிவாரணம் பெறுவதாக தெரிவித்துள்ளனர். 35 சதவிகிதத்தினர் மட்டுமே மூன்று முக்கிய அறிகுறிகளான காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சு திணறல் பற்றி அறிந்திருந்தனர்.

27 சதவிகிதத்தினர் எந்த அறிகுறிகளையும் அடையாளம் காண முடியவில்லை என்று கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.  கோவிட் 19 பரவுவதற்கு மத்தியில் நோய்த்தடுப்பு சேவையில் ஏற்பட்ட இடையூறுகளால் மில்லியன் கணக்கான குழந்தைகள் தட்டம்மை, டிப்தீரியா மற்றும் போலியோவுக்கு எதிரான உயிர் காக்கும் தடுப்பூசிகளை பெறாமல் உள்ளனர் என்று யுனிசெப் எச்சரித்துள்ளது.