சென்னை,
மிழகத்தில் உணவு பாதுகாப்பு சட்டம் நவம்பர் 1ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ரேசனில் வழங்கப்படும் விலையில்லா அரிசி வாங்குவோரை இரண்டு பிரிவாக பிரிக்க அரசு திட்டமிட்டு உள்ளது.
மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டதால், விலையில்லா ரேஷன் பொருட்கள் வழங்குவதிலும் ஒருசில புதிய நடைமுறைகளை புகுத்த  தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக,  ரேஷன் கார்டில், குடும்ப தலைவராக, ஆண்களுக்கு பதில் பெண்களை நியமிக்க திட்டமிடப் பட்டு உள்ளது. அத்துடன், அரிசி வாங்குவோரை இரண்டாகப் பிரிக்கவும் தமிழக அரசின் உணவுத் துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் மொத்தம், 2.05 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. கடந்த, இந்த மாதம் 1ந்தேதியில் இருந்து, உணவு பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து, ரேஷன் கார்டுகளை, ‘முன்னுரிமை மற்றும் முன்னுரிமை அல்லா தது’ என இரண்டு பிரிவாக  பிரிக்க, உணவுபொருள் வழங்கல் துறை முடிவு செய்துள்ளது.
 
அதன்படி, முன்னுரிமை பிரிவில், ஏழைகள், முதியோர் உதவித்தொகை பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் இடம் பெறுவர்.
அடுக்கு மாடி வீடுகளில் வசித்து, இரண்டு சிலிண்டர் வைத்திருப்பவர்கள், முன்னுரிமை அல்லாத பிரிவில் இடம் பெறுவர்.
ration
தற்போது, ரேஷன் கார்டுகளில், குடும்ப தலைவராக, ஆண்கள் மட்டும் உள்ளனர். இனி, பெண்களை குடும்ப தலைவராக குறிப்பிட, உணவுத் துறை முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, தமிழக உணவுத் துறை அதிகாரி கூறியதாவது:
 
தமிழகத்தில், 1.91 கோடி அரிசி கார்டுகள் உள்ளன. ரேஷனில் வழங்க, மாதத்துக்கு, 3.25 லட்சம் டன் அரிசி தேவை. இதில், மத்திய தொகுப்பில் இருந்து, ‘அந்தியோதயா அன்ன யோஜனா’ பிரிவில், கிலோ, மூன்று ரூபாய் விலையில் 65 ஆயிரம் டன் மட்டுமே வாங்கப்படுகிறது.
வறுமை கோட்டுக்கு கீழ் பிரிவில் உள்ளவர்களுக்காக  கிலோ, 5.65 ரூபாய்க்கு,1.05 லட்சம் டன் அரிசியும்,  வறுமை கோட்டுக்கு மேல் பிரிவில் உள்ளவர்களுக்கு கிலோ 8.30 ரூபாய்க்கு 1.26 லட்சம் டன் அரிசியும் வாங்கப்படுகிறது. மேற்கொண்டு தேவைப்படும் அரிசி  கிலோ, 19 ரூபாய்க்கு மேல் வாங்கப்படுகிறது.
தமிழகத்தில், உணவு பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தியதை தொடர்ந்து, மத்திய அரசு, வறுமை கோட்டுக்கு கீழ் பிரிவில் உள்ளவர்களுக்கு ரூ.3க்கு வாங்கும் அரிசி,  கிலோ ,5.65 ரூபாய்க்கும்,  வறுமை கோட்டுக்கு மேல் பிரிவில் உள்ளவர்களுக்கு  8.30 ரூபாய்க்கு தரும் அரிசியை, 22.50 ரூபாய்க்கு வழங்க முடிவு செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
 
எனவே, மத்திய அரசிடம், தமிழகத்திற்கு தேவையான அரிசியை பெற,   தமிழகத்தில் அரிசி கார்டுதாரர்கள், முன்னுரிமை மற்றும் முன்னுரிமை அல்லாதவர் என, பிரிக்கப்பட உள்ளனர். இந்த விபரம், மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டு, அரிசி வாங்க மட்டும் பயன்படுத்தப்படும் என்று கூறினார்.
முன்னுரிமை பிரிவு ரேஷன் கார்டுகளில், குடும்ப தலைவராக பெண்கள் நியமிக்கப் படுவர். முன்னுரிமை அல்லாத பிரிவில், ஆண், பெண், அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, குடும்ப தலைவராக இருக்கலாம்.
அனைத்து அரிசி கார்டுதாரருக்கும், ரேஷன் கடைகளில், தொடர்ந்து குடும்ப உறுப்பினர் எண்ணிக் கைக்கு ஏற்ப, இலவச அரிசி வழங்கப்படும்; யாருக்கும் எடை குறைத்து வழங்கப்பட மாட்டாது.
இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை, தமிழக அரசு விரைவில் வெளியிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ration-shop
ஆனால், தமிழக அரசு தற்போது வழங்கப்பட்டு வரும் 16 கிலோ அரிசியே தொடர்ந்து வழங்கப்படும் என்றும், தற்போது நடைமுறையில் உள்ள உச்சவரம்பின்றி ஒவ்வொரு நபருக்கும் 5 கிலோ வீதம் உச்சவரம்பின்றி அரிசி வழங்கப்படும் என்றும்  அந்தியோதியோ அன்னயோஜனா திட்டப் பயனாளிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 35 கிலோ அரிசி தொடர்ந்து விலையில்லாமல் வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்து உள்ளது.
ஆனால், ரேசன் கார்டுதாரர்களிடம் சிலிண்டர் கணக்கு எடுப்பதால், விலையில்லா ரேசன்  அரிசியின் அளவு குறைக்கப்படும் என்பது ஊர்ஜிதமாகிறது.
காரணம், ஏற்கனவே மண்எண்ணை வாங்குவதற்கும் இதுபோல் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, பின்னர் படிப்படியாக பெரும்பாலான கார்டுதாரர்களுக்கு மண்ணெண்ணை வழங்குவது நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.