உணவு பாசிசம்: ‘அட்சய பாத்ரா’ அமைப்பினர் வழங்கும் காலை உணவுக்கு திமுக கடும் எதிர்ப்பு

சென்னை:

இஸ்கான் அமைப்பைச் சேர்ந்த  ‘அட்சய பாத்ரா’ அமைப்பினர் வழங்கும் காலை உணவு திட்டத்துக்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இது உணவு பாசிசம் என்று கண்டனம் தெரிவித்து உள்ளது.

தமிழக அரசு, அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தை  கிருஷ்ணன் பக்தி இயக்கமான  இஸ்க்கான் நிறுவனத்தின்   ‘அட்சய பாத்ரா’   என்ற அமைப்புடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது.  கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டம்  சென்னையில் சில பள்ளிகளில் மட்டுமே நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தொடர முடிவு செய்துள்ளது. இதற்கான சமையற்கூடம் அமைக்கும் பணிக்கான பூமிபூஜை விழா சமீபத்தில் நடைபெற்றது.

இந்த அமைப்பினர் வழங்கும் உணவுகளில் தமிழர்களின் பாரம்பரிய உணவுப்பொருட்களான  பூண்டு, வெங்காயம் போன்றவைகள் சேர்க்கப்படுவதில்லை. உடலுக்கு நன்மையையும், சுவையும் தரும் பொருட்களை தவிர்க்க அட்சய பாத்ரா உணவு முறைக்கு தமிழக அரசியல் கட்சிகளும், தமிழ் ஆர்வலர்களும், சித்த மருத்துவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், தமிழகஅரசு அதை காதில் போட்டுக்கொள்ளாமல் தேமே என மவுனமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், திமுக தரப்பிலும், அட்சய பாத்ரா அமைப்பினர் வழங்கும் காலை உணவு திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

உப்பு சப்பில்லாத உணவையே வழங்கி வரும் அட்சய பாத்ரா உணவு திட்டத்துக்கு திமுக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. ஒரு குறிப்பிட்ட பிரிவின் உணவுப் பழக்கத்தை பள்ளி குழந்தைகள் மீது திணிக்கக்கூடாது என்று தெரிவித்துள்ள திமுக, இது ஒரு உணவு பாசிசம் என்றும் கடுமையாக சாடியுள்ளது.