தீ விபத்து நேரத்திலும் செல்ஃபி வெறி!

நேற்று நள்ளிரவு சென்னை கொடுங்கையூரில் பேக்கரி ஒன்றில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.  தகவல் கிடைத்தவுடன் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்தனர் தீயணைப்புத்துறையினரும், காவல்துறையினரும். இரு துறையினரும் இணைந்து தீயை அணைக்க போராடிக்கொண்டிருந்தார்கள்.

தீ சம்பவம் குறித்த தகவல் கிடைத்து பொதுமக்கள் ஏராளமானபேர்  அங்கே கூடிவிட்டனர். அவர்களில் பலர் தீ காட்சியுடன் சேர்த்து தங்களை செல்ஃபி எடுத்துக்கொள்வதில் மும்மரமாக இருந்தனர். இன்னும் பலர் தீ விபத்தை வீடியோ எடுத்துள்ளனர்

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், அவர்களை எல்லாம் விலகிப்போகச் சொல்லியிருக்கிறார்கள். ஆனாலும் செல்ஃபி வெறியர்கள் நகர்வதாக இல்லை. இவர்களால் மீட்பு பணியும் பாதிக்கும் நிலை.

அப்போது காவலர்கள் செல்ஃபி வெறியர்களை அடித்துத் துரத்த ஆரம்பித்தனர் இதையடுத்து அந்த செல்ஃபி வெறியர்கள் ஓடிவிட்டனர்.

அந்த நேரத்தில்தான் எரிந்துகொண்டிருந்த கடையில் இருந்த சிலிண்டர் வெடித்தது. மேலும் தீ வெகு வேகமாக பரவி, பலரும் பலத்த காயமடைந்தனர். மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், தீயணைப்பு வீரர்களோடு பொதுமக்கள் பலரும் பலத்த காயமடைந்தனர். அவர்களில் ஒரு தீயணைப்பு வீரர் உயிரிழந்தார்.

அந்த நேரத்தில் செல்ஃபி வெறியர்களை காவலர்கள் அடித்துத் துரத்தாமல் இருந்தால், அவர்களில் பலரும் பலத்த காயமடைந்திருப்பார்கள், உயிரிழப்பும் அதிகரித்திருக்கும்.

மக்களிடையே செல்ஃபி வெறி என்றுதான் குறையுமோ?