கால்பந்து உலக கோப்பை போட்டியில் சாம்பியன்: பிரான்ஸ் ரசிகர்கள் மகிழ்ச்சிக் கொண்டாட்டம்

கால்பந்து உலக கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதையடுத்து, பிரான்ஸ் நாட்டு ரசிகர்கள் மகிழ்ச்சியாக  கொண்டாடி வருகின்றனர்.

21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 14-ந்தேதி ரஷியாவில் தொடங்கியது. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி முதல் சுற்றிலேயே தோல்வியைச் சந்த்தது.  ஐந்து முறை சாம்பியனான பிரேசில் கால் இறுதியுடன் விலகியது. முன்னாள் சாம்பியன்கள் அர்ஜென்டினா, ஸ்பெயின் அணிகள்  இரண்டாவது சுற்றுடன் வெளியேறின.

ஐரோப்பிய அணிகளான முன்னாள் சாம்பியன் பிரான்சும், குரோஷியாவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்த இரு  அணிகளில் கோப்பையை வெல்லப்போவது யார் என  நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி மாஸ்கோ நகரில் உள்ள லுஸ்னிகி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது.

 

 

மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே நடைபெற்ற ஆட்டத்தின் முடிவில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை பிரான்ஸ் கைப்பற்றியது. இதற்கு முன்பு 1998-ம் ஆண்டு பிரான்ஸ் அணி பட்டம் வென்றது.

தோல்வியையே சந்திக்காமல் முதல்முறையாக இறுதி சுற்றுக்கு முன்னேறி இருந்த குரோஷியாவின்  கோப்பை கனவு  நிறைவேறவில்லை.

சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணிக்கு ரூ.255 கோடியும், 2-வது இடம் பிடித்த குரோஷியாவுக்கு ரூ.188 கோடியும் பரிசுத்தொகையாக அளிக்கப்பட்டது.

உலகக் கோப்பையை வென்ற பிரான்ஸ் அணியை இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்தினர்.

இந்நிலையில், உலக கோப்பை வென்ற பிரான்ஸ் அணியின் வெற்றியை அந்நாட்டு ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அமைந்துள்ள ஈபிள் டவரில் திரளான ரசிகர்கள் திர்ண்டனர். பிரான்ஸ் அணி வெற்றி பெற்றதை கண்ட ரசிகர்கள் உற்சாக மிகுதியில் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

நாட்டின் இதர பல பகுதிகளிலும் பொது இடங்களில் கூடிய ரசிகர்கள் பரஸ்பரம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டனர்.