இருபது ஆண்டுகளாக லாபம் தராத இந்தியத் தொழில் விவசாயம்

டில்லி

நாடெங்கும் விவசாய உற்பத்தி அதிகரித்த போதிலும் கடந்த 20 ஆண்டுகளாக விவசாயத் தொழில் லாபம் தரவில்லை என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

இந்தியா உட்பட பல நாடுகளில் விவசாயம் மக்களின் முக்கிய தொழிலாக உள்ளது.    விவசாயிகளுக்கு பயிர்க்கடன் உள்ளிட்ட பல கடன் உதவிகள், நிதி உதவிகள்,  விளை பொருட்களுக்கு ஆதார விலை உயர்வு ஆகியவைகளை அரசு அளித்து வருகிறது.   அதே நேரத்தில்  விவசாய உற்பத்தியும் அதிகரித்து வருகிறது.   விவசாயம் குறித்து 36 நாடுகள் கொண்ட ஒரு அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது.

அந்த ஆய்வறிக்கையில், “ஆய்வு எடுக்கப்பட்ட 36 நாடுகளில் 26 நாடுகள் விவசாயத்தை முக்கிய தொழில்களில் ஒன்றாக கொண்டுள்ளன.   அதிலும் இந்தியா உள்ளிட்ட மூன்று நாடுகளில் விவசாயம் மட்டுமே முக்கிய தொழிலாக உள்ளது.   இதில் இந்தியாவில் கடந்த 20  ஆண்டுகளில் மற்ற பொருட்களின் விலைகளைப் போல் விவசாய விளை பொருட்கள் விலை உயரவில்லை.

அதிலும் கடந்த 4 ஆண்டுகளாக விவசாய விளை பொருட்களின் இறக்குமதி பெருமளவில் அதிகரித்துள்ளது.   அதனால் உள் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் விவசாய விளை பொருட்களுக்கு சரியான விலை கிடைப்பதில்லை.   அதுவும் பல பொருட்களுக்கு விவசாயம் செய்வதற்கு ஆகும் செலவை விட குறைவாகவே கிடைத்து வருகிறது.

மற்ற நாடுகளில் உற்பத்தி குறைவாக உள்ள பொருட்கள் மட்டுமே அந்த நேரத் தேவைக்கு இறக்குமதி செய்யப் பட்டு உற்பத்தி அதிகரிக்கப்படுகிறது.   ஆனால் இந்தியாவில் பற்றாக்குறை ஏற்பட்டால் அந்த பொருட்களை இறக்குமதி செய்வதில் தற்போதைய அரசு காட்டும் அக்கறையை உற்பத்தியை அதிகரிப்பதில் காட்டுவதில்லை.   இதனால் விவசாயம் என்பது லாபமளிக்காத ஒரு தொழிலாக இந்தியாவில் உள்ளது” என கூறப்பட்டுள்ளது.