வரும் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை!: விஜய்

1

சட்டமன்ற தேர்தலில் ‘இளையதளபதி விஜய் மக்கள் இயக்கம்’ எந்தக்கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை.  ரசிகர்கள் தாங்கள் விரும்பும் கட்சிக்கு வாக்களிக்கலாம் என்று அந்த இயக்கத்தின் பொறுப்பாளர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அகில இந்திய இளையதளபதி விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி என். ஆனந்த்  வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:

“வருகின்ற 2016 சட்டமன்ற தேர்தலில் ‘இளையதளபதி விஜய் மக்கள் இயக்கம்’ நடுநிலையை வகிக்க முடிவு செய்துள்ளது. அதாவது, எந்தக்கட்சிக்கும் நாம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு அளிக்கவில்லை. அதே சமயம் இளையதளபதி ரசிகர்கள் தங்கள் விருப்பத்திற்கு தகுந்தாற்போல, தாங்கள் விரும்பும் கட்சிக்கு வாக்களிக்கலாம். ஆனால் இளையதளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ, கொடியையோ பயன்படுத்தக்கூடாது. இந்த நிலைபாட்டை நான் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்களை நேரில் அழைத்தும், தொலைபேசியில் தொடர்பு கொண்டும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் தெளிவுட கூறி இருக்கின்றேன்.

மேலும், இயக்கத்தின் கட்டுப்பாட்டை மீறுவோர் மீது, இயக்கத்தின் சார்பாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறி இருக்கின்றேன். இந்நிலையில் சில ஊடகங்களில் இளையதளபதி விஜய் மக்கள் இயக்கம் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவு அளித்ததுபோல் செய்திகள் வருகின்றன. அது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தி என்பதை தெளிவுபட தெரிவித்துக் கொள்கிறோம்.

எனவே இளையதளபதி விஜயின் ரசிகர்கள், எந்தவித குழப்பமும் அடையாமல் தங்கள் விருப்பம்போல் வருகின்ற சட்டமன்ற தேர்தலில், தங்கள் விருப்பமான கட்சிக்கு வாக்களிக்கலாம் என தெரிவித்துக் கொள்கிறேன். இளையதளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ, கொடியையோ எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக்கூடாது என்று மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்”
இவ்வாறு பஸ்லி விஜய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.