ஐதராபாத், 

ஐதராபாத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல்விலைக்கு குளிர்பானத்தை விற்ற கடைக்காரருக்கு ரூ10000 தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. விஜய்கோபால் என்பவர் கடந்த ஜனவரிமாதம் ஐதராபாத்திலிருக்கும்  ஷா கவுஸ் என்ற  பிரபல ஓட்டலில் குளிர்பானம் அருந்தியுள்ளார்.

300 மில்லி உள்ள அந்த குளிர்பானத்துக்கு இவரிடமிருந்து ரூ 20 வசூலித்துள்ளனர். ஆனால் அதன் அதிகபட்ச விலையே ரூ 16 தான். அதனால் ஆத்திரமடைந்த விஜய்கோபால் ரூ.4 கூடுதலாக வசூலித்ததாக கூறி ஐதராபாத் அளவியல்துறை நீதிமன்றத்தில் முறையிட்டார்.

இதையடுத்து கடந்த இரண்டுமாதங்களாக நடந்த விசாரணைக்குப் பின்னர், நீதிமன்றம்

தீர்ப்பளித்தது. அதில், சட்டத்தை மீறி அதிகவிலைக்கு குளிர்பானத்தை விற்ற கடைக்காரருக்கு தண்டனையாக ரூ.10000 விதிப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால்

அந்த கடைக்காரருக்கு குறைந்தபட்சம் ரூ25000  தண்டனை விதிக்கவேண்டும் என விஜய்கோபால் குறைபட்டுக்கொண்டார். இதேபோல் ஐதராபாத்திலுள்ள பல ஓட்டல்களுக்கு நீதிமன்றம் இதற்குமுன் தண்டனை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.