கொரோனா தடுப்பூசி மனித சோதனைக்கு1000 பேர் தயார் : ஐ சி எம் ஆர்

டில்லி

கொரோனா தடுப்பூசி மருந்து மனித சோதனையில் பங்கு பெற 1000 பேர் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக ஐ சி எம் ஆர் தெரிவித்துள்ளது.

உலக மக்களை வெகுவாக அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப் பல நாடுகளும் முயன்று வருகின்றன.   இதில் ரஷ்யாவில் நடந்த மனித சோதனையில் முதல் கட்டம் வெற்றி அடைந்துள்ளதாக அந்நாடு நேற்று தெரிவித்தது.  இந்திய மருந்து உற்பத்தி நிறுவனங்களும்  கொரோனா தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

இவற்றில் இரு மருந்துகளுக்கு மருந்துகள் கட்டுப்பாடு இயக்குநரகம் சோதனைக்கு அனுமதி அளித்துள்ளது.  இவற்றில் ஒன்று பரத் பயோடெக் நிறுவனமும் ஐ சி எம் ஆர் அமைப்பும் இணைந்து உருவாக்கி உள்ள மருந்து ஆகும்.  மற்றொன்று ஸிடாஸ் காடிலா ஹெல்த்கேர் நிறுவனத்தின் மருந்தாகும்.   இந்த இரு மருந்துகளும் எலிகள், முயல்கள் போன்ற மிருகங்களிடம் சோதனை நடத்தப்பட்டு வெற்றி பெற்று தற்போது மனித சோதனைக்கு தயாராக உள்ளன.

இந்த மனித சோதனைகளில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பங்கு பெற ஆயிரம் பேர் தயாராக உள்ளதாக ஐ சி எம் ஆர் தெரிவித்துள்ளது.   மேலும் இந்த இரு மருந்துகளையும் இவர்களுக்குச் செலுத்தி சோதனை நடத்த தயார் நிலையில் உள்ளதாக ஐ சி எம் ஆர் தெரிவித்துள்ளது.   மேலும் உலகில் உள்ள பல நோய்களுக்குத் தடுப்பு மருந்துகள் இந்தியாவில் உருவாக்கப்படுவதால் இந்த சோதனை வெற்றி பெறும் என ஐ சி எம் ஆர் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

You may have missed