தீபாவளியால் கரைந்த ரூ. 50000 கோடி வங்கிப் பணம்

டில்லி

தீபாவளியை செலவுக்காக ரூ. 50000 கோடி வரை வங்கிக் கணக்கில் இருந்து ரொக்கமாக வாடிக்கையாளர்கள் எடுத்துள்ளனர்.

இரு வருடங்களுக்கு முன்பு பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டது. அதில் இருந்து நாட்டில் ரொக்கப் பரிவர்த்தனை மிகவும் குறைந்தது. வங்கியில் இருந்து போதுமான ரொக்கப் பணத்தை வாடிக்கையாளர்கள் எடுக்க தடை விதிக்கப்பட்டதே அதற்கு முக்கிய காரணம் ஆகும். அத்துடன் வங்கிகளிலும் வாடிக்கையாளர் கேட்கும் அளவுக்கு கொடுக்க நோட்டுக்கள் இல்லாமல் இருந்தது.

இந்த நிலை மாற 100 நாட்கள் ஆகும் என மத்திய அரசு அப்போது தெரிவித்தது. ஆயினும் கரன்சி நோட்டுக்கள் பற்றாக்குறை தொடர்ந்து வந்தது. கிட்டத்தட்ட 53 வாரங்கள் கழிந்த பின்னரே வங்கிகளிடம் தேவையான அளவு கரன்சிகள் வந்துள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த வருடம் மர்ச் மாதம் இந்த கரன்சி இருப்பு ரூ. 18 லட்சம் கோடி மதிப்பை எட்டியது. இதுவே பணமதிப்பிழப்புக்கு முன்பு நாட்டில் இருந்த கரன்சிகளின் மதிப்பாகும். இந்த கரன்சி புழக்கத்தை குறைக்க அரசு டிஜிடல் பரிமாற்றத்தை ஊக்குவித்தது. ஆயினும் பலர் ஏடிஎம் கள் மூலம் பணம் எடுக்கும் போது கரன்சி பரிவர்த்தனை எதிர்பார்த்த அளவுக்கு குறையவில்லை.

இந்நிலையில் கடந்த மாதத்தில் இருந்தே தீபாவளி வர்த்தகம் தொடங்கி விட்டது. தீபாவளிக்கு பலரும் பொருட்கள் வாங்க ரொக்க பரிவர்த்தனை செய்துள்ளனர் அவ்வகையில் தீபாவளி செலவுக்காக வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் இருந்து ரூ. 49,418 கோடி ரூபாய் ரொக்கமாக எடுத்துள்ளனர்.

இந்த செய்தியை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு முதல் முறையாக இவ்வளவு ரொக்கத் தொகை வங்கியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.