டில்லி

இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடுவதையொட்டி பிரதமர் மோடி  தனது டிவிட்டர் கணக்கை நிர்வகிக்க 7 பெண் சாதனையாளர்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளார்.

உலகெங்கும் சர்வதேச மகளிர் தினம் இன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.   இதையொட்டி இந்தியத் தொல்பொருள் துறை தாஜ்மகால், குதுப்மினார், மாமல்லபுரம் உள்ளிட்ட பல புகழ் பெற்ற இடங்களைப் பார்வையிடப் பெண்களுக்கு இலவச அனுமதி அளித்துள்ளது.   சமூக வலை தளங்களில் பல தலைவர்க்ள் பெண்களுக்கு வாழ்த்துச் செய்திகள் அனுப்பி வருகின்றனர்.  அவ்வகையில் பிரதமர் மோடி தனது டிவிட்டர் கணக்கை நிர்வகிக்க்கும் பொறுப்பை 7 பெண் சாதனையாளர்களுக்கு அளித்துள்ளார்.

அவர்களில் முதலாமவராக தமிழ்பெண்ணான சினேகா மோகன்தாஸ் பதிவை வெளியிட்டுள்ளார்.  சினேகா தனது பதிவில், தாம் ஃபுட் பேங்க் இந்தியா என்னும் அமைப்பை நிர்வகித்து அதன் மூலம் ஆதரவற்றோர் மற்றும் சாலையோரம் தஞ்சம் அடைந்தோருக்கு உணவு அளித்து வருவதாகத்  தெரிவித்து பெண்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.   அத்துடன் தனது பதிவில் கிண்டலாகப் பின்னூட்டம் இட்டோருக்கும் அவர் பதில் அளித்துள்ளார்.

அடுத்ததாக மாளவிகா ஐயர் என்பவர் தனது அடுத்த பதிவைப் பதிவிட்டுள்ளார்.  இவர் தனது 13 ஆம் வயதில் நடந்த ஒரு குண்டு வெடிப்பில் அவரது கைகளை இழந்து கால்களில் ஊனம் அடைந்துள்ளார்.  ஆயினும் அவர் தனது பிஎச்டி பட்டப்படிப்பை முடித்துள்ளார்.  அவர் தன்னைப் பற்றிப் பகிர்ந்து மக்களை நம்பிக்கையுடன் இருந்தால் உலகை வெல்லலாம் எனத் தெரிவித்துள்ளார்.

இவர்கள் இருவரைத் தொடர்ந்து மற்ற சாதனைப் பெண்கள் தங்கள் பதிவுகளைப் பிரதமர் மோடியின் பக்கத்தில் பதிந்து வருகின்றனர்.