சென்னை

லித் பணியாளர்களைக் கொத்தடிமைகளாகப் பயன்படுத்தியவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்துள்ளது.

சென்னையை அடுத்துள்ள திருக்கழுக்குன்றத்தில் ஒரு அரிசி ஆலை இயங்கி வருகிறது. இந்த அரசி ஆலையின் உரிமையாளர் செல்வகுமார் என்பவர் ஆவார். இவருடைய அரிசி ஆலையில் பல தலித் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாகப் பயன்படுத்துவதாகப் புகார்கள் வந்தன. அதையொட்டி திருக்கழுக்குன்றம் காவல் நிலைய அதிகாரிகள் வருவாய்க் கோட்டாட்சியருடன் சோதனை இட்டனர்.

அந்த சோதனையில் அந்த அரிசி ஆலையில் பெண்கள் உள்ளிட்ட  சிலர் கொத்தடிமைகளாகப் பயன்படுத்தப்பட்டு வருவது தெரிய வந்தது. அவர்களை ரூ.3000 முன் பணம் கொடுத்து விலைக்கு அமர்த்தி விட்டுக் குறைந்த பட்ச ஊதியமும் அளிக்கப்படாமல் இருந்துள்ளனர். அத்துடன் அவர்களை செல்வகுமாரும் அவர் தந்தை முருகேசன் உள்ளிட்டோர் இரவும் பகலும் வேலை வாங்கி வந்துள்ளனர்.

செல்வகுமார் மற்றும் முருகேசன் மீது செங்கல்பட்டு முதன்மை  அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இந்த விசாரணையின் நடுவே முருகேசன் மரணம் அடைந்தார். செல்வகுமார் குற்றமற்றவர் எனத் தீர்ப்பு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து தலித் ஊழியர்களில் ஒருவரான மஞ்சுளா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன் தனது தீர்ப்பில் செல்வகுமாருக்கு 3 வருடக் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்துள்ளார். அத்துடன்  இவரால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு இவர் தலா ரூ.50000 இழப்பீடு வழங்க வேண்டும் எனத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.