மேட்டூர்

சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து 300 நாட்களுக்கும் மேலாக 100 அடிக்கு குறையாமல் இருந்து வருகிறது.

தமிழகத்தின் மிகப் பெரிய அணையான மேட்டூர் அணை மூலம் டெல்டா மாவட்டங்கள்  உள்ளிட்ட 12 மாவட்டங்களில் உள்ள 16.05 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது.   இந்த நிலங்களின் பாசனத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி அணையில் இருந்து நீர் திறக்கப்படும்.  இதற்கு அணையின் நீர் மட்டம் 90 அடிக்கு மேல் இருக்க வேண்டும்.

 நேற்று காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1740 கன அடி நீர் வந்துக் கொண்டு இருந்தது.  குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்படுகிறது.  தற்போது நீர் மட்டம் 101.69 அடியாக உள்ளது. நீர் இருப்பு 67.04 டிஎம் சி ஆக உள்ளது.

இந்த அணையின் நீர்மட்டம் கடந்த 2005 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து 427 நாட்கள் 100 அடிக்கு குறையாமல் இருந்தது.  தற்போது 14 ஆண்டுகளுக்கு பிறகு அணையின் நீர் மட்டம் தொடர்ந்து 301 நாட்களாக 100 அடிக்குக் குறையாமல் உள்ளது.   எனவே இந்த ஆண்டு பாசனத்துக்கு நீர் திறக்கப்படும் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

சென்ற ஆண்டு அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி அன்று தான் பாசனத்துக்கான நீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.