டெல்லி:

டெல்லியை சேர்ந்த யுனிடெக் என்ற கட்டுமான நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்து வருகிறது. கடந்த 2010 ஆண்டு விஸ்தா என்ற திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணியை தொடங்கியது. 39 பேரிடம் இருந்து ரூ. 16.55 கோடியை அந்த நிறுவனம் முன் பணமாக பெற்றது. குறிப்பிட்ட காலத்தில் கட்டுமான பணியை முடித்து அந்நிறுவனம் ஒப்படைக்கவில்லை.

இதனால் பணம் செலுத்தியவர்கள் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த அக்டோபர் மாதம் நடந்த இந்த விசாரணையின் போது ‘‘கட்டுமான பணிகள் முடியும தருவாயில் உள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வீடு ஓப்படைக்கப்படும். அதனால் மேலும் 6 மாத கால அவகாசம் வழங்க வேண்டும்’’ என்று யுனிடெக் சார்பில் ஆஜரான வக்கீல் சிங்வி தெரிவித்திருந்தார். ஆனால் அவகாசம் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதை எதிர்த்து யுனிடெக் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இதன் மீதான விசாரணை இன்று உ ச்சநீதிமன்றத்தில் நடந்தது. அப்போது,‘‘ பணம் செலுத்தியவர்கள் அதை திருப்பி கேட்கின்றனர். அதனால் அவர்கள் பணம் செலுத்திய ஆண்டு முதல் ஆண்டுக்கு 14 சதவீத வட்டியுடன் முன் பணமான ரூ. 16.55 கோடியை 39 பேருக்கும் திருப்பி கொடுக்க வேண்டும். 8 வாரத்தில் இந்த தொகையில் 90 சதவீதத்தை திருப்பி கொடுத்து விட வேண்டும்’’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், ‘‘ வீடு வாங்குவது ஒவ்வொரு மக்கள் வாழ்க்கையின் கனவாகும். கட்டுமான நிறுவனங்கள் அந்த கனவோடு விளையாடும் வகையில் குறிப்பிட்ட காலத்திற்குள் ஒப்படைக்காமல் இழுத்தடித்து அவர்களை அங்கும் இங்கும் அழைக்கழிப்பது சரியல்ல’’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.