ஐந்து ரூபாய் செலவழிக்கப் பல முறை யோசிக்கும் வாடிக்கையாளர்கள் : பிரிட்டானியா இயக்குநர்

டில்லி

வாடிக்கையாளர்கள் ஐந்து ரூபாயைச் செலவழிக்கப் பல முறை யோசிக்கும் நிலையில் உள்ளதாக பிரிட்டானிய நிறுவன நிர்வாக இயக்குநர் வருண் பெர்ரி தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சி அடைந்துள்ளது. விரைவில் இந்த நிலை மாறி பொருளாதாரம் மேம்படும் என அரசு தெரிவித்து வருகிறது. ஆனால் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சி அடைந்து வருவதாகப் பல நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால் வாகனங்கள் உள்ளிட்ட பல பொருட்களின் விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த பொருளாதார வீழ்ச்சி உணவுப் பொருட்கள் விற்பனையிலும் எதிரொலித்துள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய பிஸ்கட் தயாரிக்கும்  நிறுவனமான பிரிட்டானியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வருண் பெர்ரி, “எங்களது பிஸ்கட் நிறுவனம் விற்பனையில் முதல் இடத்தில் இருந்து வருகிறது. நாட்டில் விற்பனையாகும் பின்கட்டுகளில் மூன்றில் ஒரு பங்கு எங்கள் தயாரிப்பாகும். வழக்கமாக விற்பனை 7% வரை அதிகரித்து வரும். நிலையில் எங்கள் பொருட்களின் விற்பனை 10 – 11% வரை உயரும்.

ஆனால் தற்போது இந்த விற்பனை வளர்ச்சி மிகமிகக் குறைவாக உள்ளது.  இது வாகனச் சந்தையில் விலை காரணமாக அதிகமாகத் தெரிகிறது. உணவுப் பொருட்கள் சந்தையில் விற்பனை குறைவு சிறிதளவாக இருந்தாலும் எண்ணிக்கை அதிகம் என்பதால் மொத்தத்தில் அதிகமாகவே இருக்கும். தற்போதைய நிலையில் ஒரு வாடிக்கையாளர் ஐந்து ரூபாய் செலவழிக்கப் பலமுறை யோசிக்கிறார். இது பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதைப் பிரதிபலிக்கிறது.

இந்த வீழ்ச்சி மேலும் ஓரிரு காலாண்டுகள் தொடரும் என தோன்றுகிறது. அதன் பிறகு முன்னேற வாய்ப்புண்டு. எங்களுக்கு மட்டுமின்றி பலருக்கும் இந்த விற்பனைக் குறைவு மிகவும் துயரத்தை அளித்துள்ளது. எனவே இப்போதே முயன்றால்  மட்டுமே விற்பனையை அதிகரிக்க முடியும். இந்த நடவடிக்கைகளில் எங்கள் சக நிறுவனங்களான, பார்லே மற்றும் ஐடிசி முயற்சிகள் எடுத்து வருகின்றன. இன்னும் 8 அல்லது 9 மாதங்களில் எங்கள் விற்பனை விகிதம் உயரலாம்” எனத் தெரிவித்துள்ளார்.