ராணிப்பேட்டை

குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்ததால் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் ஜமாத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தாக்கல் செய்தார். அந்த மசோதாவுக்கு ஆதரவாக 334 உறுப்பினர்களும், எதிராக 106 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

அங்கு நிறைவேறிய குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மாநிலங்களவை மசோதாவுக்கு ஆதரவாக 125 உறுப்பினர்களும், எதிராக 105 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.  தற்போது இரு அவைகளிலும் நிறைவேறிய மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப் பின்னர் சட்டமாகியுள்ளது.

இந்த மசோதாவுக்கு மாநிலங்களவையில் அதிமுக ஆதரவு தெரிவித்தது. அதிமுக உறுப்பினர்.,எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், இலங்கையிலிருந்து அகதிகளாக வந்துள்ள தமிழர்கள் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவில் சேர்க்கப்படாதது வருத்தம் அளிப்பதாகத் தெரிவித்தார். மேலும், இலங்கைத் தமிழர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் உரிமை வழங்கும் வகையில் மசோதாவில் திருத்தம் தேவை எனவும் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் வலியுறுத்தினார்.

தற்போது குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த காரணத்துக்காக அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் ஜமாத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.  அவரை ராணிப்பேட்டை ஜமாத் கூட்டமைப்பு காப்பாளர் பதவியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.