முதல் முறையாக 2019 மக்களவை தேர்தல் வாக்குச்சாவடிகளில் புகையிலைக்கு தடை

டில்லி

நாட்டில் முதல் முறையாக வரும் 2019 ஆம் வருட மக்களவை தேர்தல் வாக்குச் சாவடிகளில் புகையிலைக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

புகையிலை உபயோகிப்பது அதிகரித்து வருவதைப் போல புகையிலை எதிர்ப்பும் அதிகரித்து வருகிறது. பல முக்கிய பொது  இடங்களிலும்  அரசு அலுவலகங்களிலும் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் அந்த இடங்களில் அதிக அளவில் புகையிலையை மெல்வது நடந்து வருகிறது.

முக்கியமாக குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் சட்டப்படி தடை செய்யப்பட்ட போதிலும் பல இடங்களில் ரகசியமாக விற்கப்படுகிறது.டில்லி அரசின் சுகாதாரத் துறை சமீபத்தில் வாக்குச் சாவடிகள் புகை இல்லா இடமாக மட்டுமின்றி புகையில இல்லா இடமாகவும் இருக்க வேண்டும் என தெரிவித்திருந்தது.

அதை பின்பற்றி அடுத்த வருடம் நடைபெற உள்ள மக்களவை தேர்தல் வாக்குச் சாவடிகளை புகையிலை இல்லாத இடமாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதை ஒட்டி சிகரெட், பீடி பொன்றவைகள் மட்டுமின்றி குட்கா, மணம் ஊட்டப்பட்ட மற்றும் சுவையூட்டப்பட்ட புகையிலைகள் ஆகியவைகளுக்கும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

வாக்குச் சாவடி அதிகாரிக்கு வாக்குச் சாவடிகளில் புகையிலையை உபயோகிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் மக்களிடையே புகையிலை எதிர்ப்பு குறித்து விழிப்புணர்ச்சி ஏற்படும் என ஆணையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.