நாட்டிலேயே முதன்முறையாக, தனியார் பங்களிப்புடன் சென்னையில் திடக்கழிவு மேலாண்மை திட்டம்: முதல்வர் துவக்கிவைத்தார்

சென்னை:  நாட்டிலேயே முதன்முறையாக, தனியார் பங்களிப்புடன் சென்னையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று துவக்கிவைத்தார்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை, தீவுத்திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பெருநகர சென்னை மாநகராட்சியின் 7 மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நாட்டிலேயே முதன்முறையாக செயல்திறன் அளவீட்டு முறையில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளும் திட்டத்தை துவக்கி வைக்கும் அடையாளமாக மெசர்ஸ் அர்பேசர் எஸ்.ஏ. அண்ட் சுமித் பெசிலிட்டிஸ் லிமிடெட் நிறுவனத்தின் காம்பாக்டர்கள், மெக்கானிக்கல் ஸ்வீப்பர், இ–ரிக்ஷாக்கள் ஆகிய வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நாட்டிலேயே முதன்முறையாக பெருநகர சென்னை மாநகராட்சியின் 7 மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில், செயல்திறன் அளவீட்டு முறையில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை தனியார் பங்களிப்புடன் துவக்கி வைக்கும் அடையாளமாக காம்பாக்டர்கள், மெக்கானிக்கல் ஸ்வீப்பர், இ-ரிக்‌ஷா வாகன சேவைகளை இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, பெருநகர சென்னை மாநகராட்சியின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல், சென்னை மாநகரில் சேகரமாகும் அனைத்து திடக்கழிவுகளையும் குப்பைக் கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்வதை தவிர்த்து, நவீன தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞான முறைகளை பயன்படுத்தி மறுசுழற்சி செய்து பொதுமக்களுக்கு சுகாதார மற்றும் சுத்தமான சூழலை ஏற்படுத்துதல், நிலம் மற்றும் நீர் மாசுபடுதலை தவிர்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்க பல்வேறு திடக்கழிவு மேலாண்மை பணிகளை செயல்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது.

சென்னையில் தினசரி 5 ஆயிரம் டன் குப்பை

பெருநகர சென்னை மாநகராட்சியில் நாள்தோறும் சராசரியாக 5,000 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. திடக்கழிவு மேலாண்மை விதிகளை முழுமையாக செயல்படுத்தும் விதமாக 19,467 பணியாளர்கள் மூலம் வீடு, வீடாக சென்று குப்பைகள் பெறப்பட்டு, அவை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இவ்வாறு தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளின் ஈரக் கழிவுகளிலிருந்து இயற்கை உரம் மற்றும் உயிரி எரிவாயு தயாரிக்கப்பட்டு வருகிறது. உலர்கழிவுகள் தரம் பிரிக்கப்பட்டு, மறு உபயோகம் மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்டு வருகிறது. எஞ்சியுள்ள குப்பைகள் தற்போது பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பை கொட்டும் வளாகங்களில் சேகரமாகும் குப்பைகளின் அளவுகளை படிப்படியாக குறைக்கும் வகையிலும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், நிலம் மற்றும் நிலத்தடி நீரின் மாசுபாட்டை தவிர்க்கும் வகையிலும், குப்பைகளிலிருந்து இயற்கை உரம் மற்றும் உயிரி எரிவாயு தயார் செய்ய கட்டமைப்புகள், தாவர கழிவுகளிலிருந்து எரிபொருள் தயாரிக்கும் கட்டமைப்புகள், உலர் குப்பைகளை நவீன முறையில் எரியூட்டும் கலன்கள், பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து திரவ எரிபொருள் தயார் செய்யும் ஆலைகள் மற்றும் குப்பை கொட்டும் வளாகங்களில் பயோ–சுரங்க முறையில் குப்பைகளை பிரித்தெடுத்து, மறுசுழற்சி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஸ்பெயின் நிறுவனத்துடன் 8 ஆண்டு ஒப்பந்தம்

பெருநகர சென்னை மாநகராட்சியில், திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தினை மேலும் சிறப்பாக செயல்படுத்தும் பொருட்டும், மண்டலங்களில் உள்ள தெருக்களை பெருக்குதல், வீடுகள்தோறும் தரம்பிரித்து சேகரிக்கப்படும் கழிவுகளை, அதற்குரிய பதப்படுத்தப்படும் நிலையங்களுக்கு கொண்டு செல்லுதல், எஞ்சிய கழிவுகளை குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு சேர்த்தல் ஆகிய பணிகளை பொதுமக்கள் மற்றும் தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளும் வகையிலும், ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த மெசர்ஸ் அர்பேசர் எஸ்.ஏ. அண்ட் சுமித் பெசிலிட்டிஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு 8 ஆண்டு காலத்திற்கு பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனம் ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, ஓமன், பக்ரைன், பிரேசில், அர்ஜெட்டினா, சிலி, பெரு ஆகிய நாடுகளிலும், நம் நாட்டின் தலைநகரமான டில்லி மாநகரத்திலும் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

7 மண்டலங்களில் 16,621 தெருக்கள்பெருநகர சென்னை மாநகராட்சியின் தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய 7 மண்டலங்களுக்குட்பட்ட 92 வார்டுகளில் உள்ள 16,621 தெருக்களில் வசிக்கும் சுமார் 37 லட்சம் மக்கள் பயனடையும் வகையில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள மெசர்ஸ் அர்பேசர் எஸ்.ஏ. அண்ட் சுமித் பெசிலிட்டிஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு 24.12.2019 அன்று பணி ஆணை வழங்கப்பட்டது.

பேட்டரி வாகனங்கள்

பெருநகர சென்னை மாநகராட்சியின் தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய 7 மண்டலங்களில் ஓராண்டு காலத்திற்குள் அனைத்து வீடுகளிலிருந்தும் 100 சதவிகிதம் தரம்பிரிக்கப்பட்ட குப்பைகள் முறைப்படி பெறப்படும். இதற்காக, பழைய மூன்று சக்கர மிதிவண்டிக்குப் பதிலாக, மின்கல வாகனங்கள் (பேட்டரியில் இயங்கும் வாகனம்) பயன்படுத்தப்படும். இதன்மூலம் மேற்குறிப்பிட்ட 7 மண்டலங்களில் மனித ஆற்றலை கொண்டு இயக்கப்பட்டு வந்த மூன்று சக்கர மிதிவண்டிகள் முற்றிலும் நீக்கப்பட்டு சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்கல வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளை வீடுகள்தோறும் பெறுதல், குறைந்த உறுதி செய்யப்பட்ட கழிவுகளை பதனிடுதல், வளாகத்திற்கு கொண்டு சேர்த்தல், பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்களை 6 மணி நேரத்திற்குள் சரிசெய்தல் போன்ற 34 எண்ணிக்கையிலான செயல்திறன் குறியீடுகள் வாயிலாக பணிகளை கண்காணித்து, அதன் மதிப்பீட்டு அடிப்படையில் ஒப்பந்ததாரர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படும்.

இப்பணிகளை மேற்பார்வையிட பிரத்யேகமாக மூன்றாம் நிலை ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டு, ஒப்பந்ததாரர்களின் செயல்திறன் கண்காணிக்கப்படும். தரம் பிரிக்கப்பட்ட குப்பைகள் நேரடியாக பரவலாக்கப்பட்ட குப்பை பதனிடு நிலையங்களான இயற்கை உரம் தயாரிக்கும் மையம், பொருட்கள் மீட்பு வசதி மையம், எரியூட்டும் நிலையம், உயிரி அழுத்த இயற்கை வாயு நிலையம், தோட்டக் கழிவு மற்றும் தேங்காய் மட்டை பதனிடும் மையம், வளமீட்பு மையம், உயிரி மீத்தேன் வாயு நிலையம் ஆகிய மையங்களில் சேர்க்கப்படும். மேலும், மேலாண்மை தகவல் அமைப்பு மூலம் குப்பை தொட்டிகளிலிருந்து குப்பைகள் அகற்றுதல் மற்றும் வாகனங்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும்.

3 ஆயிரம் பேட்டரி வாகனம்

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 7 மண்டலங்களிலும் மேற்குறிப்பிட்ட தூய்மைப் பணிகளை மேற்கொள்ள 8 ஆண்டு காலத்திற்கு மெசர்ஸ் அர்பேசர் எஸ்.ஏ. அண்ட் சுமித் பெசிலிட்டிஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் மூலம் 125 காம்பாக்டர்கள், 38 மெக்கானிக்கல் ஸ்வீப்பர், 3,000 இ–ரிக்ஷாக்கள், 11,000 காம்பாக்டர் குப்பைத் தொட்டிகள் போன்ற உபகரணங்களுடன், 10,844 எண்ணிக்கையிலான அனைத்து வகை பணியாளர்களும் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மீன்வளம், பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மாண்புமிகு ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா.பென்ஜமின், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் க.சண்முகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் கோ.பிரகாஷ், மெசர்ஸ் அர்பேசர் எஸ்.ஏ. அண்ட் சுமித் பெசிலிட்டிஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாகிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.