டில்லி:

சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர் சி.எஸ்.கர்ணன். அப்போது, தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவு ஒன்றை வழக்காக எடுத்து, அதற்கு தடை விதித்தார் கர்ணன்.

இந்தப் பிரச்சினை உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப் பட்டதுது.  கர்ணன் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டு, அவர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், பிரதமர் அலுவலகம், சட்டத்துறை அமைச்சகம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு நீதிபதி கர்ணன் புகார் கடிதங்களை அனுப்பினார். அதில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது கடுமையான புகார்களைத் தெரி வித்திருந்ததாக கூறப்படுகிறது.

இப்பிரச்சினையை தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்காக உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சலமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோக்கூர், பி.சி.கோஸ், குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய 7 நீதிபதிகள் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி, ‘நீதிபதி கர்ணன் பிரதமர் உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நீதிபதிகளையும் நீதிமன்றத்தின் மாண்பையும் சீர்குலைக்கும் வகையில் புகார்கள் தெரிவித்திருக்கிறார்.  அவர் மீது முறைப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை இப்படியே விட்டால், மக்கள் மத்தியில் நீதிமன்றத்தின் மீதான மரியாதை குறைந்துவிடும். சட்டப் பிரிவுகள் 129 மற்றும் 142(2)-ன் கீழ், உச்ச நீதிமன்றத்துக்கு உள்ள தனிப்பட்ட அதிகாரத்தின்படி, உயர் நீதிமன்றம் மற்றும் அதற்கு கீழ் இயங்கும் நீதிமன்ற நீதிபதிகளின் மீது நடவடிக்கை எடுக்க முடியும்’ என்றார்.

அப்போது தலைமை நீதிபதி கேஹர், ‘உச்சநீதிமன்றம் இதுவரை இப்படி ஒரு நடவடிக்கை எடுத்ததில்லை. இந்த நடவடிக்கை எதிர்காலத்தில் முன்மாதிரியாக அமைய வேண்டும். ஆகவே, ஒரு நீதிபதி மீது நடவடிக்கை எடுக்கும்போது, அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி கவனமுடன் செயல்பட வேண்டும். நீதிபதி கர்ணனிடம் இருந்து எனக்கும் பல கடிதங்கள் வந்தன. இருப்பினும், அவரது கருத்தையும் கேட்க விரும்பு கிறோம்’ என்று தெரிவித்தார்.

பிறகு கர்ணன் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கு வரும் 13-ம் தேதி நேரில் ஆஜராகி பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். அவர் தன்னிடம் உள்ள நீதிமன்ற பணிகள் மற்றும் நிர்வாக ஆவணங்களை உடனடியாக கொல்கத்தா உயர் நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைத்துவிட்டு, நீதிமன்ற பணிகளில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் கர்ணன் பணியாற்றியபோது, 12 வழக்குகள் தொடர்பான ஆவணங்களை அவர் ஒப்படைக்கவில்லை என்றும், அவருக்கு சென்னையில் ஒதுக்கப்பட்டுள்ள குடியிருப்பை இன்னும் காலி செய்யவில்லை என்றும் சென்னை உயர் நீதிமன்றம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புகார் தெரிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தனக்கு அனுப்பப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் இயற்கை நீதிக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்ற பதிவாளருக்கு கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் கடிதம் எழுதினார்.

உச்ச நீதிமன்ற பதிவாளருக்கு எழுதப்பட்ட அந்த  நான்கு பக்க கடிதத்தில் கர்ணன் தெரிவித்திருப்பதாவது:

“என் மீதான நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் இயற்கை நீதிக்கு எதிரானது. இது எஸ்.சி., எஸ்.டி. சட்டத்துக்கு எதிரானது. உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் கிடையாது. எனது கருத்தை கேட்காமலேயே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது அடிப்படை தவறு.

சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றியபோது அங்கு நடை பெற்ற ஊழல்களை ஒழிக்க வேண்டும் என்பதே எனது நோக்க மாக இருந்தது. நீதிமன்றத்தின் மாண்பை குலைக்க வேண்டும் என்று ஒருபோதும் நான் நினைத்ததே இல்லை.

ஆகவே இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும்” என்று அந்த கடிதத்தில் கர்ணன் குறிப்பிட்டிருந்தா்.

இந்த நிலையில், இன்று உச்சநீதிமன்றம் முன்பு கர்ணன் ஆஜராகிறார்.

கர்ணன் உயர்நீதிமன்ற நீதிபதி என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் பாராளுமன்றத்தில் இம்பீச்மெண்ட் கொண்டுவரப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.