பெனால்டி ஷூட்அவுட் வாய்ப்பில் முதல்முறையாக வெற்றிப்பெற்ற இங்கிலாந்து – கொலம்பியாவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

உலக கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றின் கடைசி போட்டியில் பெனால்டி வாய்ப்பில் கொலம்பியாவை இங்கிலாந்து 4-3 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிக்கொண்டது. இதனையடுத்து இங்கிலாந்து காலிறுதி சுற்றுக்கு தகுதிப்பெற்றது. உலக கோப்பை கால்பந்து போட்டியின் லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் 16 அணிகள் கொண்ட நாக் அவுட் சுற்று நடைபெற்று வந்தது. இதன் கடைசி போட்டியில் செவ்வாய்கிழமை இரவு இங்கிலாந்தை எதிர்த்து கொலம்பியா மோதியது.
ingland
கடுமையாக நடைபெற்ற முதல் பாதி ஆட்டம் இரு அணிகளும் கோல் அடிக்காமல் முடிந்தது. அடுத்து தொடங்கிய பாதி ஆட்டத்தின் 57வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி இங்கிலாந்து அணியின் ஹாரி கேன் ஒரு கோல் அடித்தார். இதனால் இங்கிலாந்து 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. போட்டி விருவிருப்பாக சென்றுக் கொண்டிருந்த நிலையில் இறுதி நிமிடத்தில் கொலம்பியாவின் மினா ஒரு கோல் அடித்து போட்டியை சமநிலைக்கு கொண்டு வந்தார்.

இதையடுத்து கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டதில் இரு அணிகளும் கோல் அடிக்க தவறின. அதையடுத்து கொடுக்கப்பட்ட பெனால்டி ஷூட்அவுட் வாய்ப்பில் இங்கிலாந்து அணி நான்கு கோல்களை அடித்தது. இங்கிலாந்து சார்பில் கேன், ரேஷ்ப்போர்ட், ட்ரிப்பர், எரிக் ஆகியோர் கோலடித்தனர்.
ingland
இவர்களை தொடர்ந்து கோலடிக்க முயன்ற கொலம்பியாவின் வீரர்கள் 3 கோல்களை மட்டுமே அடித்தனர். பால்கோ, குவாடிரடோ, முரேல் ஆகியோர் கோலடித்தனர். இறுதியாக 4-3 என்ற கோல்கள் கணக்கில் கொலம்பியாவை, இங்கிலாந்து வெற்றிக் கொண்டது. இந்த வெற்றியை தொடர்ந்து இங்கிலாந்து அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. ஹாரி கேன் பிஃபா உலக கோப்பை போட்டியில் இதுவரை ஆறு கோல்கள் அடித்து முன்னிலையில் உள்ளார்.

இதற்கு முன்பு நடைபெற்ற நாக் அவுட் போட்டிகளில் வெற்றிபெற்ற பிரான்ஸ், உருகுவே, ரஷ்யா, குரோஷியா, பிரேசில், பெல்ஜியம் மற்றும் ஸ்வீடன் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

உலக கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணி பெனால்டி ஷூட்அவுட் வாய்ப்பை பயன்படுத்தி ஒருமுறைக்கூட வெற்றிப்பெற்றதில்லை. இந்த போட்டியில் மட்டுமே இங்கிலாந்து முதல் முறையாக பெனால்டி ஷூட்அவுட் வாய்ப்பில் வெற்றிப்பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

You may have missed