ஜப்பான் கடற்படை பிரிவு கமாண்டராக பெண் நியமனம்…..முதன்முறையாக வாய்ப்பு

டோக்கியோ:

மிகப் பெரிய போர் கப்பல்கள் அடங்கிய ஜப்பான் கடற்படை பிரிவுக்கு முதன் முதலாக பெண் ஒருவர் கமாண்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

‘‘ரியோகோ அஜூமா (வயது 44) என்ற இந்த கமாண்டன்ட் இனி ஆயிரம் சிப்பந்திகளை கொண்ட 4 போர் கப்பல்கள் பிரிவை வழிநடத்தவுள்ளார். இந்த பணிக்கு ஒரு பெண் நியமனம் செய்யப்படுவது இதுவே முதன்முறை. அவர் பெண் என்பதால் மட்டும் இந்த பதவிக்கு தேர்வு செய்யப்படவில்லை’’ என்று கடல்சார் தற்காப்பு படை செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த கப்பல்கள் ஜப்பான் கடற்படையின் பெரிய போர் கப்பல்களாகும். இதில் ஒரு ஹெலிகாப்டரும் இருக்கும். இது குறித்து அஜூமா கூறுகையில், ‘‘எனக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த கடுமையான பணியை சிறப்பாக மேற்கொள்வேன். நான் ஒரு பெண் என்பதை நினைக்கவில்லை. எனிதும் இதர பெண் அதிகாரிகளுக்கு முன்னுதாரணமாக இருப்பேன்’’ என்றார்.

இந்த தற்காப்பு படையில் 14 ஆயிரம் பெண்கள் பணியாற்றி வருகின்றனர். மொத்த எண்ணிக்கையில் இவர்கள் வெறும் 6 சதவீதம் தான். பெண்களுக்கு சம உரிமை அளிக்கும் வளர்ந்த நாடுகள் பட்டியலில் ஜப்பான் பின் தங்கியுள்ளது. 465 உறுப்பினர்களை கொண்ட ஜப்பான் நாடாளுமன்றத்தில் 47 இடங்கள் மட்டுமே பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.