முதன் முறையாக கவிஞர்  வைரமுத்து தரப்பு விரிவான விளக்கம்: வைரமுத்துவின் நிழல், பாஸ்கர் பேட்டி

மீப நாட்களாக கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கூறிவரும் பாலியல் புகார்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.  நீண்ட மவுனத்துக்குப் பிறகு, “என் மீது வழக்கு தொடுத்தால் எதிர்கொள்ளத் தயார்” என்ற வைரமுத்து, “காலம் பதில் சொல்லும்” என்பதோடு நிறுத்திக்கொண்டார்.

இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த பாடகி சின்மயி, வைரமுத்து மீதான குற்றச்சாட்டுக்களை மீண்டும் உறுதிபடக் கூறியிருக்கிறார். அதோடு, வைரமுத்து மீது காவல்துறையில் புகார் அளிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே  நேற்று முன்தினம் மதுரை சென்ற வைரமுத்து திடீரென அங்குள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் தற்போது நலமுடன் இருப்பதாக உறவினர்கள் தரப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், வைரமுத்துவுக்காக நம்மிடம் பேசுகிறார் பாஸ்கர்.  கவிஞர் வைரமுத்துவின் உதவியாளர் என்பது இவருக்கான சம்பிரதாய அடையாளம்தான்.

மற்றபடி, வைரமுத்துவின் குரலை கேட்க வேண்டுமென்றால் முன்னதாக பாஸ்கரின் குரலை கேட்க வேண்டும், வைரமுத்துவைப் பார்க்க வேண்டுமென்றால் முதலில் பாஸ்கரை பார்க்க வேண்டும்…   முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வைரமுத்துவின் நிழலாக அல்ல.. உயிரின் ஒரு பகுதியாக ஒட்டியேயிருப்பவர் பாஸ்கர்…

வைரமுத்து – பாஸ்கர்

இதோ வைரமுத்துவுக்காக நமது கேள்விகளை எதிர்கொள்கிறார் பாஸ்கர்.

 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வைரமுத்துவின் உடல் நிலை எப்படி இருக்கிறது?

 உணவு ஒவ்வாமை… அவ்வளவுதான். சிறு சிகிச்சைக்குப் பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டார். விரைவில் சென்னை வருவார்.

 சின்மயி மீண்டும் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறியிருக்கிறாரே.. அதற்கு முன்பாக, வைரமுத்து – சின்மயி அறிமுகம் ஏற்பட்டது எப்படி என்று சொல்லுங்களேன்..

 மணிரத்தினம் இயக்கிய, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ திரைப்படத்துக்காக ஏ.ஆர். ரகுமான் இசையில் வைரமுத்து எழுதிய பாடல் ஒன்றை, சுவர்ணலதா பாட வேண்டியிருந்தது.  சுவர்ணலதாவுக்கு நேரம் இல்லாத சூழலில், அவருக்காக டிராக் பாட அழைக்கப்பட்டவர்தான் இந்த சின்மயி.

டிராக்கை கேட்ட வைரமுத்து, இந்தக் குரலே நன்றாக இருக்கிறதே என்று பாராட்ட… ஏ.ஆர். ரகுமானும் அதை ஏற்கவே, சின்மயியே அப்பாடலை பாடினார்.

அதாவது சின்மயி முகத்தையே பார்க்காத வைரமுத்து, குரல் சிறப்பாக இருக்கிறதே என்று பாராட்டவே.. அந்த வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. ஆனால் அந்த நன்றிகூட சின்மயிக்கு இல்லை.

“சில ஆண்டுகளுக்கு முன்பு வைரமுத்து எழுதிய கவிதை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு என்னை அழைத்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடுமாறு கேட்டார். நான் மறுத்துவிட்டேன். இதனால், ‘அரசியல்வாதியைப் பற்றி தரக்குறைவாக பேசினாய் என்று சொல்லிவிடுவேன்” என வைரமுத்து மிரட்டியதாக சின்மயி கூறுகிறாரே..

 சின்மயி தவறாகக் கூறுகிறார். அது தமிழ்த்தாய் வாழ்த்து அல்ல. வேறு பாடல்.

2012ம் வருடம்  சென்னை உயர் நீதிமன்றத்தின் 150வது ஆண்டு விழா, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் நடந்தது.  அந்த நிகழ்ச்சிக்காக  வைரமுத்து இலவசமாக ஒரு பாடல் எழுதிக்கொடுத்தார்.  அதை மேடையில் பாட சின்மயி ஒப்புக்கொண்டார்.

ஆனால் கடைசி நேரத்தில் நிகழ்ச்சிக்கு வர மறுத்துவிட்டார். கேட்டதற்கு, இதைவிட அதிகமாக சம்பளம் தருகிறார்கள் என்பதற்காக என் தாயார் வேறு நிகழ்ச்சிக்கு ஒப்புக்கொண்டுவிட்டார் என்றார்.

இது வைரமுத்துவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.  ஏனென்றால் இனி வேறு ஒருவரை பாட அழைக்க வேண்டும். அவர் பிரபலமானவராக இருக்க வேண்டும். அவருக்கு பயிற்சி தரவேண்டும்.. இத்தனை பிரச்சினைகள் இருக்கின்றன. பிறகு பாடகி ஹரிணியை பாட வைத்தார் வைரமுத்து.

சின்யியின் இந்த நடவடிக்கையினால் கோபமான வைரமுத்து, “வாக்கு சுத்தம் வேண்டும்” என்று கூறினார். மேலும், முதல்வர் கலந்துகொள்ளும் விழாவில் இப்படி மாற்றிப் பேசுகிறாயே என்றார். இதைத்தான் அரசியல்வாதிகள் பெயரைச் சொல்லி மிரட்டியதாக தகவறாகச் சொல்கிறார் சின்மயி.

மற்றபடி எப்போதும் எவரையும் மரியைதைக்குறைவான வார்த்தைகளில் பேசுபவரல்ல வைரமுத்து.

இந்த நிகழ்வுக்குப் பிறகு தான் பொறுப்பேற்கும் நிகழ்வுகளுக்கு சின்மயியை வைரமுத்து அழைப்பதில்லை. ஆனால் சின்மயியும் அவரது தாயார் பத்மாசினியும் தொடர்ந்து வைரமுத்துவை நாடி வந்தார்கள். ஆனால் வைரமுத்து அவர்களைவிட்டு ஒதுங்கியே இருந்தார்.

 ஓ..

ஆமாம்.. உயர்நீதிமன்ற விழா நிகழ்வு 2012ல் நடந்தது. அதன் பிறகு வைரமுத்து, தான் பொறுப்பேற்கும் எந்தவொரு நிகழ்ச்சிக்கும் சின்மயியை அழைப்பதில்லை.

வைரமுத்து பத்மபூசன் விருது பெற்றபோது சின்மயி ட்விட்

ஆனால் வைரமுத்துவை சமாதானப்படுத்த சின்மயியும் அவரது தாயார் பத்மாசினியும் தொடர்ந்து முயன்றார்கள்.

2013ல் வைரமுத்துவுக்கு பத்பூசன் விருது அளிக்கப்பட்டது. உடனே பொக்கேவுடன் வாழ்த்து தெரிவிக்க சின்மயி வந்தார். ஆனால் வைரமுத்து  அவரைப் பார்க்க விரும்பவில்லை.   நான்தான் பொக்கேவை வாங்கிக்கொண்டு  சின்மயியை திருப்பி அனுப்பினேன்.

அதே போல 2014ல் வைரமுத்து பிறந்த நாளில் சின்மயி அம்மா பத்மாசினி, வைரமுத்துவுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார். “சின்மயி என்ற பயிருக்கு தண்ணீர் ஊற்றியது வைரமுத்துவும் ஏ.ஆர்.ரகுமானும்தான்” என்று பதிவிட்டார்.

வைரமுத்து பிறந்தநாளுக்கு நன்றி கூறியும், வாய்ப்புக்கு நன்றி கூறியும் சின்மயி தாயார் பத்மாசினி ட்விட்

அப்போதும், சின்மயியை வைரமுத்து பொருட்படுத்தவே இல்லை. 

பிறகு தனது திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்க சின்மயி வந்தார். அந்த நேரத்திலும், வைரமுத்து ஒதுங்கியே இருந்தார். ஆனால் வைரமுத்துவின் மகன் கார்க்கியை தொடர்பு கொண்ட சின்மயி, வைரமுத்துவை நேரில் பார்த்து அழைப்பிதழ் அளிக்க வேண்டும் என்று வேண்டினார். இதையடுத்து கார்க்கி,  வைரமுத்துவிடம் “வாழ்வில் ஒரு முறை வருவது திருமணம். அந்த நிகழ்வுக்காக அழைக்கிறார். நேரில் அழைப்பிதழை ஏற்றுக்கொள்ளுங்களேன்”என்று கூறினார். இதையடுத்தே தனக்கு நேரில் அழைப்பிதழ் வைக்க சின்மயியை அனுமதித்தார் வைரமுத்து.

அப்போதும், தனது  செயலுக்கு வருத்தம் தெரிவித்து, அவசியம் திருமணத்துக்கு வரவேண்டும் என்று வேண்டி வேண்டி கேட்டுக்கொண்டார். இதனால்தான் சின்மயி திருமணத்துக்கு வைரமுத்து சென்றார்.

சின்மயி

2005ல் சுவிட்சர்லாந்தில் நடந்தது என்ன…?

அங்கு  நிகழ்ச்சி முடிந்து மறுநாளே வைரமுத்து அங்கிருந்து கிளம்பிவிட்டார். ஆனால் சின்மயியும் அவரது தாயாரும் மேலும் சில நாட்கள் இருந்துவிட்டு கிளம்பினர். ஆனால் வைரமுத்துவால் தான் உடனடியாக சுவிசில் இருந்து கிளம்பியதாக சின்மயி பொய் சொல்கிறார்.

இவர்கள் பொய் சொல்கிறார்கள் என்பதை சுவிஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சுரேசும் கூறியிருப்பது செய்தியாக வந்திருக்கிறதே. தவிர வருடம் தெரியவில்லை, பாஸ்போர்ட்டை பார்த்துத்தான் சொல்ல வேண்டும் என்கிறார் சின்மயி. தேதி நினைவில் இல்லாமல் இருக்கலாம்.. வருடம் மறக்குமா..

இதில் குறிப்பட வேண்டிய விசயம்.. 2005ல் சுவிசில் நடந்ததாக சின்மயி கூறுகிறார். ஆனால் 2012வரை  வைரமுத்துவுடன் தொடர்பில்தான் இருந்தார். 2012ல் நிகழ்ச்சிக்கு வருவதாகச் சொல்லி கடைசி நேரத்தில் அவர் மறுத்ததால் வைரமுத்துதான் சின்மயியை ஒதுக்கினார்.

ஆக 2005க்குப் பிறகு ஏழு வருடங்கள் வைரமுத்துவுடன் எப்படி இணைந்து செயல்பட்டார். ஒருவர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டால் அவரது முகத்தைப் பார்க்கவே முடியாதே… அப்படி தவறு நடந்திருந்தால் எதிர்த்துக் குரல் கொடுத்திருக்காவிட்டாலும் இணைந்து செயல்படுவதைத் தவிர்த்திருக்கலாமே!

மற்றபடி, சின்மயி ஒரு சைக்கோ..அவரது அம்மாவும் ஒரு சைக்கோ. இந்த அம்மா டார்ச்சர் தாங்காமல் அவரது கணவர் விலகிப்போய்விட்டார் என்கிறார்கள்.  அவருக்கு மனநிலை சிகிச்சை அளிக்கப்பட்டதாகக்கூட கூறுகிறார்கள்.

சின்மயி திருமணத்தில் வைரமுத்து

பழிவாங்குவதற்காக சின்மயி குற்றம்சாட்டுகிறார் என்கிறீர்கள். மேலும் சில பெண்கள் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறியிருக்கிறார்களே..

அப்படி சிலர் பதிவிட்டதாக கூறுகிறார்கள். ஆனால் அப்படி  குற்றம் சாட்டுபவர்கள்  எவரும் தங்களை வெளிப்பட்டுத்திக்கொள்ளவே இல்லையே. அதாவது சின்மயியே இப்படி சிலரை ஏற்பாடு செய்து புகார் செய்திருக்கலாம். அல்லது அவரே பேக் ஐடி மூலம் புகார்களை பதியலாம்.

தவிர, வாய்ப்பு கிடைக்காத சிலர் வேண்டுமென்றே இப்படி வைரமுத்து மீது பழிபோடக்கூடும்.

திரைப்படத்தில் பாடல் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தில் சில பெண்கள் வாய்ப்பு கேட்டு வருவார்கள்.. ஏ.ஆர்.ரகுமானிடம் அறிமுகப்படுத்துங்கள் என்பார்கள்… சிபாரிசு செய்யுங்கள் என்பார்கள்.  ஆனால் அப்படியெல்லாம் செய்ய முடியாது என்பது அவர்களுக்குப் புரியாது. நடிக்க வாய்ப்பு கேட்டுக்கூட சிலர் வருவார்கள். நடிப்பதற்கான வாய்ப்புக்கு இயக்குநரைத்தான் அணுக வேண்டும் என்பது கூட அவர்களுக்குத் தெரியாது. அப்படிப்பட்டவர்கள் ஏதோ வைரமுத்து வாய்ப்பு வாங்கித் தரவில்லை என்று நினைத்துக்கொண்டு பொய்ப்புகார்களைத் தெரிவிக்கலாம்.

வைரமுத்துவிடம் சின்மயி ஆசீர்வாதம்..

தனக்குச் சொந்தமான பெண்கள் விடுதியிலும் வைரமுத்து அத்துமீறினார் என்று ஒரு குற்றச்சாட்டு சொல்லப்படுகிறதே..

இதுவும் வடிகட்டின பொய். அங்கு தங்கியிருப்பவர்களைக் கேட்டாலே தெரியும். அந்த விடுதிக்கு என்று பொறுப்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள்தான் விடுதியைக் கவனித்துக்கொள்கிறார்கள். மற்றபடி வைரமுத்து அங்கு செல்வதே கிடையாது.  அதற்கு அவருக்கு நேரமும் கிடையாது,

வைரமுத்து மீது கடுமையான குற்றச்சாட்டுக்கள் வீசப்படுகின்றன. இந்த நிலையில் அவரது மனைவி பொன்மணி, மகன்கள் கபிலன், கார்க்கி ஆகயோர் மவுனமாகவே இருக்கிறார்களே..

அவர்கள் ஏன் பேச வேண்டும்? சாலையில் போகும் எத்தனையோ பேர் நம்மைப் பற்றி எவ்வளவோ பேசுவார்கள்.. அதையெல்லாம் நாம் பொருட்படுத்த வேண்டுமா?

தற்போது மீண்டும் வைரமுத்து மீது குற்றம் சாட்டியிருக்கும் சின்மயி, அவர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்போவதாக தெரிவித்திருக்கிறாரே!

 அளிக்கட்டும். சட்டப்படி எதிர்கொள்வோம். நீதி வெல்லும்.

–    டி.வி.எஸ். சோமு