சென்னை:

டுத்த 2 வாரங்களுக்கு சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தற்போது  பரிசோதனைகளின்  எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளதால் பாதிப்புகள் வெளியே தெரிய வரும் என்று கூறி உள்ளார்.

சென்னை சாலிகிராமத்தில்  உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில், சித்த மருத்துவத்தின் மூலம் 3 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில்கலந்துகொண்ட ராதாகிருஷ்ணன் கூறியதாவது,

சித்த மருத்துவ முறையில் சில நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்கள் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினர்.. அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.

சென்னையில் உள்ள 39 ஆயிரத்து 537 தெருக்களில், தற்போது 5 ஆயிரத்து 210 தெருக்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு உள்ளது. தேனாம்பேட்டை, ராயபுரம், திரு.வி.க நகர், அண்ணா நகர், கோடம்பாக்கம் ஆகிய சவாலான மண்டலங்களில் மக்கள் ஒத்துழைப்பு அதிகம் தேவைப்படுகிறது.

ம ற்ற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அரசின் வழிமுறைகளை பின்பற்றுகின்றனர். இதனால் அந்த பகுதிகளில் கொரோனா பாதிப்பு இல்லை.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்து வருவதற்காக கூடுதலாக 50 ஆம்புலன்சு வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா மையங்களில் 17 ஆயிரம் படுக்கைகள் உள்ளன. அங்கு மேலும் படுக்கை வசதிகள் அதிகரிப்பதற்கும், மருத்துவமனைகளிலும் படுக்கை எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

பரிசோதனை எண்ணிக்கையை அதிகரித்ததன் மூலம் அடுத்த 2 வாரங்களுக்கு பாதிப்பு அதிகமாக தான் வரும். இதன் மூலம் மற்றவர்களுக்கு கொரோனா பரவுவதை தடுக்க முடியும்

பரிசோதனை மேற்கொண்டாலே வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்பது நோய் பரவாமல் இருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை. ஒருவர் பரிசோதனை செய்தவுடன் அவர் முடிவு வரும் வரை வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும். அதேபோல் பரிசோதனை முடிவில் தொற்று இல்லாமல் அறிகுறி இருந்தாலும் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்

இவ்வாறு அவர் கூறினார்.