டில்லி

கடந்த 9 மாதங்களாக மக்களவையில் துணை சபாநாயகர் பதவி நியமிக்கப்படாமல் உள்ளது

ஆச்சர்யம் .. ஆனால் உண்மை.

மக்களவை தேர்தல் முடிந்து 9 மாதங்கள் ஆகிவிட்டன.

சபையை ஒற்றை ஆளாக இருந்து சபாநாயகர் ஓம் பிர்லா நடத்திகொண்டிருக்கிறார்.அவரது சுமையை குறைக்க இதுவரை துணை சபாநாயகரை தேர்வு செய்யவே இல்லை பா.ஜ.க.கூட்டணி அரசு.

கடந்த 20 ஆண்டுகளில் இதுபோல் நடந்தது இல்லை.

கடந்த 1999 ஆம் ஆண்டு பா.ஜ.க.கூட்டணி வென்றது, வாஜ்பாய் பிரதமர் ஆனார்.

ஒரே மாதத்தில் காங்கிரஸ் கட்சியின் பி.எம்.சயீத் துணை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.

2004 ஆம் ஆண்டில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. மன்மோகன் சிங் பிரதமர் ஆனார்.

இரண்டே மாதத்தில் அகாலிதளத்தின் சரண்ஜித் சிங் துணை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2009 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் முடிந்த பின் இரு  மாதங்களில் கரியமுண்டா ( பா.ஜ.க.) துணை சபாநாயகர் ஆனார்.

கடந்த தேர்தலுக்கு முந்தைய தேர்தலில் (2014) பா.ஜ.க.ஆட்சியை பிடித்தது. அ.தி.மு.கவின் தம்பிதுரை துணை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். தேர்தல் முடிந்து 3 மாதங்களில் அவர் ஒருமனதாக அந்த பொறுப்புக்கு தேர்வு ஆனார்.

இப்போது கடந்த 9 மாதங்களாக துணை சபாநாயகர் நாற்காலி காலியாகவே உள்ளது.

அதற்கான தேர்வு நடைபெறவில்லை.இது தொடர்பான முன் முயற்சிகளும் நடப்பதாக தெரியவில்லை.

பட்ஜெட் கூட்டத்தொடர் முடிய இன்னும் 17 வேலை நாட்களே உள்ளன.

அதற்குள் இந்த தேர்தல் நடக்க வாய்ப்பு இல்லை.

ஏனெனில், துணை சபாநாயகர் என்ற பதவியை  நிரப்ப வேண்டும் என்ற எண்ணமே பா.ஜ.க.வுக்கு இருப்பதாக தெரியவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

’’ அரசியல் சட்டத்தை நசுக்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளது, பி.ஜே.பி.அரசு.. துணை சபாநாயகர் பதவி முக்கியமானது. தேர்தல் முடிந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப்போகிறது. அந்த பதவியை இன்னும் நிரப்பாமலேயே உள்ளது’’ என்கிறார், காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூர்.