டில்லி

நிஜாமுதின் பகுதியில் உள்ள மசூதியில் நடந்த தொழுகையால் கொரோனா விதி மீறல் நடந்ததாக மசூதி தலைவர் மீது டில்லி அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது.

நாடெங்கும் பரவி வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகக் கூட்டம் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது.  நாடெங்கும் கடந்த 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலாக்கப்பட்டுள்ளது.  இதையொட்டி நாடெங்கும் கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளன.  இந்நிலையில் டில்லியில் உள்ள நிஜாமுதின் பகுதியில் உள்ள ஒரு மசூதியில் தொழுகை நடந்துள்ளது.

அந்த தொழுகையில் கலந்துக் கொண்டவர்களில் 175 பேருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.   மேலும் இந்த தொழுகையில் கலந்துக் கொண்ட தெலுங்கானாவைச் சேர்ந்த 6 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  அத்துடன் இந்த தொழுகையில் கலந்துக் கொண்ட காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த சிலருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டுள்ளன.

இதையொட்டி டில்லி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,”கடந்த 24 முதல் முழு அடைப்பு உள்ள நிலையில் ஒவ்வொரு விடுதிகள் மற்றும் மக்கள் அதிகம் வரும் இடங்களில் சமூக இடைவெளியை அந்த இடத்தின் பொறுப்பாளர் கவனிக்க வேண்டும்.  ஆனால் இங்கு இந்த விதிகள் மீறபட்டுளன. இதனால் காவல்துறை மசூதி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், “முழு அடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டியதில் ஒவ்வொரு குடிமகனுக்கும் பொறுப்பு உள்ளது. இத்தகைய விதிமீறல் கிரிமினல் குற்றமாகும்.   இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் இந்த தொழுகையில் கலந்துக் கொண்டோரை தனிமைப்படுத்தி உள்ளோம்” எனக் கூறப்பட்டுள்ளது.