சென்னை:

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளுக்கு செல்வதாக கூறிவிட்டு, சக அமைச்சர் விஜயபாஸ்கருடன் 14 நாள் பயணமாக முதல்வர் எடப்பாடி சென்றுள்ள நிலையில், தொடர்ந்து பல அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு பணமாகி வருகின்றனர்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியதைப்போல,  யாருக்கு முதலீடுகளை ஈர்க்கப்போகிறார்கள் அமைச்சர்களும் வெளி நாடுகளுக்கு பறக்கிறார்கள் என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.

ஏற்கனவே தமிழக அமைச்சர் நிலோபர் கபில் ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச திறன்மேம்பாட்டு போட்டி மற்றும் கண்காட்சியில் பங்குபெற சென்றுவிட்டார்.

எடப்பாடியைத் தொடர்ந்து, தமிழக கல்விஅமைச்சர்  செங்கோட்டையனும் வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளார். கல்வி வளர்ச்சி குறித்து அறிய  7 நாட்கள் அரசு முறை பயணமாக பின்லாந்து நாட்டிற்கு  பயணம் மேற்கொண்டுள்ளார்.

தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்,இந்தோனேசியா புறப்பட்டுச் சென்றுள்ளார். அத்துடன் தாய்லாந்து, சிங்கப்பூர் நாடுகளுக்கும் அவர் செல்ல உள்ளார். அங்கு வனத்துறையில் பின்பற்றப்படும் முறைகள், காட்டுத்தீ தடுப்பு முறைகள் ஆகியவற்றை அறிந்து கொண்டு அதனை தமிழகத்திலும் செயல்படுத்த முயற்சி செய்வாராம்.

மற்றொரு அமைச்சரான செய்தி விளம்பரத் துறை அமைச்சரான கடம்பூர் ராஜூ மொரிஷீயசுக்கும் பயணமாகி உள்ளார். அங்கிருந்து நியூயார்க் சென்று முதல்வருடன் இணைவாராம்.

இவர்களைத் தொடர்ந்து நாளை இரவு அமைச்சர்கள்  ஆர்.பி.உதயகுமார், உடுமலை ராதா கிருஷ்ணன், ராஜேந்திர பாலாஜி ஆகிய 3 பேரும் அமெரிக்கபயணமாக உள்ளனர். இவர்களுடன் தமிழக  தலைமைச் செயலாளர் சண்முகம் முதல்வரின் உதவியாளர் கிரிதரன் ஆகியோரும் பயணமாகிறார்கள். இவர்களும் முதல்வருடனான பயணத்தில் இணைய உள்ளார்கள்.

ஏற்கனவே நிதிச்சிக்கலில் தள்ளாடி வரும் தமிழக அரசு, தற்போது அமைச்சர்கள் மற்றும் அதிகாரி களுடன் வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளது மேலும் நிதிச் சிக்கலை ஏற்படுத்தும் என நிதித்துறை அதிகாரிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

தொடர்ந்து ஒவ்வொரு அமைச்சராக வெளிநாடு பயணமாவது தமிழக மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இன்னும் எத்தனை அமைச்சர்கள் அரசு பணத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளப் போகிறார்கள் என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியபடி, யாருக்கு முதலீடு சேர்க்க தமிழக அமைச்சர்கள் ஒவ்வொருவராக வெளிநாடுகளுக்கு பறக்கிறார்கள் என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.