டில்லி

பிரபல வர்த்தக செய்தி பத்திரிகையான ஃபோர்ப்ஸ் பத்திரிகை இந்த வருடத்துக்கான மிகப் பெரிய இந்திய செல்வந்தர்கள்  பட்டியலை வெளியிட்டுள்ளது.

பிரபல வர்த்தக செய்தி பத்திரிகையான ஃபோர்ப்ஸ் பத்திரிகை ஒவ்வொரு வருடமும் மிகப் பெரிய இந்திய செல்வந்தர்கள் பட்டியலை வெளியிடுவது வழக்கமாகும்.   அவ்வகையில் 2019 ஆம் வருடத்துக்கான மிகப் பெரிய இந்தியச் செல்வந்தர்கள் 100 பேர் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் 6 புதுமுகங்கள் இணைந்துள்ளனர்.  அவர்களில் பைஜு நிறுவன அதிபர் பைஜு ரவீந்திரன், ஹல்திராம் நிறுவனத்தின் மனோகர் லால் மற்றும் மதுபூஷன் அகர்வால், ஜாகுவார் நிறுவன அதிபர் ராஜேஷ் மெஹ்ரா ஆகியோர் அடங்குவர்.   கடந்த வருடம் 2 ஆம் இடத்தில் இருந்த விப்ரோ அதிபர் அசிம் பிரேம்ஜி தற்போது 17 ஆம் இடத்துக்கு இறங்கி உள்ளார்.

இந்த பட்டியலில் எட்டு இடங்கள் முன்னேறி கவுதம் அதானி இரண்டாம் பெரிய செல்வந்தராகி உள்ளார்.   தொடர்ந்து 12 ஆம் முறையாக ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி முதல் இடத்தை  பிடித்துள்ளார்.  அவருடைய சொத்து சுமார் ரூ.3.7 லட்சம் கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது.   இரண்டாம் இடத்தில் உள்ள அதானிக்கு ரூ. 1.12 லட்சம் கோடி சொத்து உள்ளது.

இவர்களுக்கு அடுத்ததாக இந்துஜா சகோதரர்கள், பலோன்ஜி மிஸ்திரி, உதய் கோடக், சிவநாடார், ராதாகிருஷ்ணன் தமானி, கோத்ரெஜ் குடும்பத்தினர், லட்சுமி மிட்டல் மற்றும் குமார் பிர்லா ஆகியோர் உள்ளனர்.  இவர்கள் இந்தியாவின் மிகப் பெரிய செல்வந்தர்களில் முதல் 10 இடங்களில் உள்ளனர்.