மொரதாபாத், உத்தரப்பிரதேசம்

முதன் முதலாக லவ் ஜிகாத் சட்டத்தின் கீழ் கைதான பெண்ணுக்குக் கட்டாய கருச்சிதைவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இந்துப் பெண்ணும் இஸ்லாமிய ஆணும் திருமணம் செய்து கொள்வதை லவ் ஜிகாத் என அழைத்து அதற்கு எதிராக பாஜக அரசு சட்டம் இயற்றி உள்ளது.   இந்த சட்டத்தின் கீழ் முதல் முதலாக ஒரு பெண் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.  சுமார் 22 வயதாகும் அந்தப் பெண்ணின் பெயர் முஸ்கன் ஜகான் என்பதாகும்.  அவர் மூன்று மாத கர்ப்பமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

அவருடன் கைது செய்யப்பட்ட 27 வயதான அவர் கணவர் ரஷீத் எங்கு என அறிவிக்கப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.  அவர் முஸ்கானை வற்புறுத்தி இஸ்லாம் மதத்துக்கு வலுக்கட்டாயமாக மாற்றி திருமணம் செய்து கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  முஸ்கன் ஜகான் ஒரு அரசு இல்லத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

நேற்று உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத் நக்ரில் உள்ள அரசு இல்லத்தில் இருந்து தனது மாமியாருக்கு தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்ட முஸ்கன் ஜகான் தனக்கு திடீரென ரத்தப் போக்கு ஏற்பட்டு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.,  அவருக்கு இல்லத்து ஊழியர் ஒருவர் ஊசி போட்டு கட்டாய கருச்சிதைவு செய்யப்பட்டுள்ளதாக மாமியார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தனது மருமகள் இஸ்லாம் மதத்துக்கு மாறி ஒரு இஸ்லாமியரைத் திருமணம் செய்து கொண்டதால் இந்த கொடுமை இழைக்கப்பட்டுள்ளதாக மாமியார் தெரிவித்துள்ளார்.   இந்த மதச்சார்பான உலகு தனது பேரக்குழந்தை பிறக்கும் முன்பே அதற்குப் பிரியாவிடை கொடுத்து அனுப்பி விட்டதாகவும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.