வுகாத்தி

மாற்றாந்தாயை விட்டு தனியே வருமாறு வற்புறுத்திய மனைவியிடம் இருந்து கணவருக்கு கவுகாத்தி நீதிமன்றம் விவாகரத்து அளித்துள்ளது.

தற்போது சமுதாயத்தில் அதிக அளவில் பேசப்படுவது தனிமையில் விடப்படும் முதியோர் குறித்ததாகும்.   பல பெண்கள் தங்களது கணவரின் பெற்றோர் தங்களுடன் வசிப்பதை விரும்பாததே இதற்குக் காரணம் என சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.   பல கூட்டுக் குடும்பங்கள் இதனால் பிரிந்துள்ளதாகவும் ஏராளமான முதியோர் ஆதரவின்றி விடப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அசாம் மாநிலத்தில் தாயை இழந்த ஒருவரை அவரது மாற்றாந்தாய் தனது மகனைப் போல் எண்ணி வளர்த்து வந்துள்ளார்  மகன் வளர்ந்த நிலையில் தந்தை மரணம் அடைந்ததால்  அந்த தாய்க்குப் பிழைக்க வழி இல்லாமல் மகனுடன் வசித்து வந்தார்.  இது அவருடைய மருமகளுக்குப் பிடிக்கவில்லை.  இதனால் தனது கணவரைத் தாயை விட்டு தனியே வருமாறு அழைத்துள்ளார்.  அதைக் கணவன் மறுத்ததால் தகராறு ஏற்பட்டுள்ளது

இதையொட்டி கணவர் மாவட்ட குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார். குடும்ப நீதிமன்றம் இவரது விவாகரத்து மனுவை நிராகரித்தது.  இதை எதிர்த்து கணவர் கவுகாத்தி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை கவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அஜய் லம்பா மற்றும் சவுமித்ர சைக்கியா ஆகியோரின் அமர்வு விசாரித்து வந்தது.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  அந்த தீர்ப்பில், “மனுதாரரின் மாற்றாந்தாய்க்கு எவ்வித வருமானமும் இல்லை என்பதும் அவர் வயது முதியவர் என்பதையும் இந்த நீதிமன்றம் கணக்கில் எடுத்துக் கொண்டு இந்த தீர்ப்பை வழங்குகிறது.  அவ்வாறு இருக்கும் ஒருவரை அவர் மாற்றாந்தாய் என்றாலும் விட்டு விட்டு தனியே வருமாறு ஒரு மனைவி கணவரை வற்புறுத்துவது சட்டப்படி கொடூரமான செயலாகும்

தன்னை வளர்த்த தாயைக் காப்பாற்ற வேண்டியது மனுதாரரின் கடமையாகும்.  அந்த கடமையைத் தடுக்க அவர் மனைவிக்கு உரிமை இல்லை.   இவ்வாறு வயதானவருக்குக் கொடுமை செயல் செய்வது இந்தியச் சட்டம் 2007 இன் படி  சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கும் அளவுக்குக் குற்றமாகும், எனவே கணவருக்கு இந்த நீதிமன்றம் அவர் மனைவியிடம் இருந்து விவாகரத்து அளிக்கிறது” என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 2016 ஆம் வருடம் உச்சநீதிமன்றத்தில் பெற்றோரிடம் இருந்து கணவரைப் பிரிக்க முயன்ற மனைவிக்கு இதே காரணங்களைக் காட்டி விவாகரத்து அளித்ததையும் நீதிமன்றம் சுட்டிக் காட்டி உள்ளது. அத்துடன் எந்த ஒரு கணவராலும் இதைப் பொறுக்க முடியாது எனவும் எந்த ஒரு மகனும் தனது வயதான பெற்றோர் அல்லது தனது வருமானத்தை நம்பி உள்ள உறவினரைப் பிரிய ஒப்புக்கொள்ள மாட்டார் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.