டில்லி

சமீபத்தில் தொலை தொடர்பு நிறுவனத்தின் நிலுவைத் தொகை குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அச்சமடைந்துள்ளதாக வோடபோன் முன்னாள் அதிகாரி மார்டன் பீட்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்கள் உள்கட்டமைப்புக்காகச் செலவு செய்யும் தொகையில் கிடைக்கும் வருமானத்தை தங்களது சரி செய்யப்பட்ட மொத்த வருமானத்தில் காட்டுவது வழக்கம் இல்லாமல் இருந்தது.   ஆனால் மத்திய தொலை தொடர்புத்துறை அதையும் சேர்த்துக் கணக்கிட்டும் மொத்த வருமானமாகக் காட்டி அதற்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும் எனக் கூறி இருந்தது.

ஆனால் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களது உள்கட்டமைப்புக்காகச் செலவு செய்த தொகையின் வருமானத்தை தங்கள் மொத்த வருமானத்தோடு சேர்க்கக் கூடாது என வழக்கு  தொடர்ந்தன.   இந்த வழக்கில் சமீபத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் இந்த வருமானமும் சரிசெய்யப்பட்ட மொத்த வருமானத்தில் சேர்க்கப்பட வேண்டும் எனவும் அதற்கான கட்டணங்களை அபராதத்துடன் மத்திய தொலைத் தொடர்புத் துறைக்குச் செலுத்த வேண்டும் எனக்  கூறப்பட்டது.

ஏற்கனவே கடும் இழப்பு காரணமாக ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனங்கள் இணைந்துள்ளன.தற்போது இந்த இரு நிறுவனங்களும் இணைந்து ரூ.39000 கோடியை இன்னும் 3 மாதங்களுக்குள் செலுத்த வேண்டி உள்ளது. அதே வேளையில் இவர்களுக்கு எதிரி நிறுவனமான ஏர்டெல் ரூ.40000 கோடி அளிக்க வேண்டி உள்ளது.

இது குறித்து வோடபோன் நிறுவன முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி மார்டன் பீட்டர்ஸ், “ஏற்கனவே இந்திய தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் கடும் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன.  இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி உரிமத் தொகையும் அதிகரித்துள்ளது. எனவே வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இந்திய தொலைத்தொடர்பு சேவை மிகவும் அச்சம் அளித்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.