மூன்று வாரங்களில் வெளிநாட்டு முதலீடு ரூ.32000 கோடி குறைந்தது

டில்லி

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவிடம் இருந்து மூன்றே வாரங்களில் ரூ.32000 கோடியை திரும்ப பெற்றுள்ளனர்.

இந்தியப் பொருளாதாரம் நாளுக்கு நாள் சீர் குலைந்து வருவதாக உலக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் இந்திய ரூபாய் மதிப்பு குறைந்து வருவதுமே ஆகும். அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு நடுவே வர்த்தகப் போர் நிலவி வருவது இந்திய வியாபார சந்தையில் கடும் தாக்கம் ஏற்படுத்தி உள்ளது.

ஈரானுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. இந்தியாவுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முக்கிய நாடான ஈரானுக்கு விதிக்கப்பட்ட இந்த தடையால் இந்தியாவுக்கு ஏற்பட்ட பாதிப்பினால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இந்திய நிறுவன பங்குகளின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

இதை ஒட்டி வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் செய்துள்ள முதலீடுகளை திரும்பப் பெற்று வருகின்றன. சென்ற மாதம் (செப்டம்பரில்) இந்தியாவுக்கு வெளிநாட்டு முதலீடு ரூ.21000 கோடி கிடைத்தது. ஆனால் கடந்த மூன்று வாரங்களில் மட்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூ.32000 கோடி முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளனர். இதனால் இந்த மாதம் இந்தியப் பங்கு சந்தை மேலும் வீழ்ச்சி அடையும் என கூறப்படுகிறது.