மாலத்தீவு அதிபர் தேர்தல் : வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கு தடை
மாலே
மாலத்திவு அதிபர் தேர்தலை முன்னிட்டு வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கு செய்திகள் சேகரிக்க அனுமதி மறுக்கப் பட்டுள்ளது.
மாலத்தீவில் அவசரநிலை அறிவிக்கப்பட்டதில் இருந்தே ஒரு நிலையற்ற அரசியல் நிலை உள்ளதாக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதை தொடர்ந்து அதிபர் தேர்தலுக்கு வேட்பு மனு பெறப்பட்டது. வாக்கு மனு அளிக்க கடைசி தேதியான கடந்த மாதம் 14 ஆம் தேதி வரை 37 வேட்புமனுக்கள் தேர்தல் ஆணையத்திடம் அளிக்கபட்டுள்ளது.
இந்த வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்டு அதில் 11 மனுக்கள் ஆவணங்கள் சரியில்லாததால் நிராகரிக்கப்பட்டன. இந்நிலையில் தேர்தலை ஒட்டிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது தேர்தலின் போது பத்திரிகையாளர்கள் நடந்துக் கொள்ள வேண்டிய விதிமுறைகள் குறித்த தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அந்த அறிவிப்பில்,”தவறான தகவல்கள் மற்றும் செய்திகளை வெளியிடுவதை பத்திரிகைகள் நிறுத்த வேண்டும். வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் இந்த தேர்தல் செய்திகளை சேகரிக்க அனுமதி கிடையாது. பார்வையாளர்களாக வர உள்ள வெளிநாட்டு பத்திரிகையாளர்கள், பிசினஸ் விசா மூலம் வர வேண்டும். சுற்றுலா விசாவில் வர அனுமதி கிடையாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.