டெல்லி: கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்த வேண்டும், பற்றாக்குறையை போக்க வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கொடுத்த அறிவுரையை நக்கல் செய்த மோடி அரசு, இன்று, ராகுலின் அறிவுரையை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சோகம் ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், வெளிநாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். பல மாநில அரசுகளும் வலியுறுத்தி வந்தன.

இதுதொடர்பாக  காங்கிரஸ் தலைவரும், வயநாடு தொகுதி   காங்கிரஸ் எம்.பியிமான  ராகுல்காந்தி சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த  நிலையில், வெளிநாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்றும்,  வெளிநாடுகளைச் சேர்ந்த தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்.

ஆனால், ராகுலின் கோரிக்கையை  நிராகரித்த  மத்தியஅரசு ராகுல் குறித்தும் கடுமையாக விமர்சித்தது. பல அமைச்சர்களின் ராகுலின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் ராகுலுக்கு பதிலளிக்கும் விதமாக தனது டிவிட்டர் பக்கத்தில்,

வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறி மருந்து நிறுவனங்களுக்கு தற்போது அவர் பரப்புரை செய்கிறார். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சுகாதாரத்துறை பராமரிப்புக்கான அடிப்படை உள்கட்டமைப்புகளுக்கு தட்டுப்பாடு இருக்கிறதே தவிர கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என்பதை ராகுல் காந்தி தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு எந்த பற்றாக்குறையும் இல்லை. ஆனால் ராகுல் கவனம் செலுத்துவதில் தான் பற்றாக்குறை உள்ளது. ராகுல் காந்தி ஏன் இன்னும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை?. அவர் கொரோனா தடுப்பூசி போட விரும்பவில்லையா? அல்லது பல வெளிநாட்டு பயணங்களின் போது அங்கு எங்காவது ராகுல்காந்தி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டாரா? அல்லது அதுபற்றி வெளியட விரும்பவில்லையா? என கேள்வி எழுப்பி இருந்தார்.

 இந்த நிலையில், தற்போது நாடு முழுவதும் அதிகரித்து வரும் தொற்று பரவல் மற்றும் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கு மத்தியஅரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டு உள்ளது. 

ரஷ்யாவின் புட்னிக்-வி தடுப்பூசிக்கு  மோடி அரசு ஒப்புதல் வழங்கியதுடன், மேலும் ஃபைசர், மாடர்னா, ஜான்சன் ஜான்சன் உள்பட  பல நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்க முடிவு செய்துள்ளது.

நாட்டில் எழுந்துள்ள பிரச்சினைகள், மக்களின் வாழ்வாதாரம்  குறித்து கிஞ்சித்தும் கவலைப்படாமலும், எதிர்க்கட்சிகளின் அறிவுரையை ஏற்க மறுத்தும், தான்தோன்றித்தனமாக செயல்பட்டு வரும் மோடி அரசு,  மீண்டும் மீண்டும் தவறு செய்து வருகிறது என்பதை, தற்போதைய வெளிநாட்டு தடுப்பூசிகளின் பயன்பாட்டுக்கு அனுமதிக்கு வழங்கியுள்ளது மூலம் அம்பலமாகி உள்ளது.