மார்கழி மாதம் பிறப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி

மார்கழி மாதப் பிறப்பை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறை அனுமதியளித்துள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இங்கு பௌர்ணமி, மாதப்பிறப்பு காலங்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். இதற்காகவே வனத்துறை சிறப்பு அனுமதி வழங்குவது வழக்கம். அவ்வப்போது பெய்யும் கனமழை காரணமாக, சில காலங்கள் அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்றன.  மார்கழி மாதம் பிறப்பதை முன்னிட்டு, நாளை ஒருநாள் மட்டும் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு, வனத்துறை சிறப்பு அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பாக வனத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மார்கழி 1ம் தேதியை முன்னிட்டு நாளை ஒருநாள் மட்டும் பக்தர்கள் சதுரகிரி மலையேறி, சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. நாளை காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.