குட்டி யானையை தோளில் தூக்கிச் சென்ற வன ஊழியர் : நெஞ்சை உருக்கும் நிகழ்வு

மேட்டுப்பாளையம்

ரு குட்டியானையை தன் தோளில் தூக்கி தாய் யானையிடம் கொண்டு சென்ற வன ஊழியரின் புகைப்படம் வைரலாகி வருகிறது.   அதன் பின்னணிக் கதை இதோ :

மேட்டுப்பாளையம் அருகிலுள்ள வனப்பகுதியில் தனது ஒரு மாத குட்டியுடன் நீர் பருக ஒரு யானை எரிக்கு வந்துள்ளது.   நெல்லிமலை அருகே அமைந்துள்ள அந்த ஏரியில் யானைக் குட்டி தவறி விழுந்து சேற்றில் சிக்கிக் கொண்டது.   அதைக் காப்பாற்றி மேலே கொண்டு வர தாய் யானை முயன்றும் முடியவில்லை.   அப்போது அங்கு டிராக்டரில் வந்த ஒருவரை அந்த தாய் யானை வழி மறித்துள்ளது.

பயந்து போன டிராக்டர் ஓட்டுனர் விஷயம் புரியாமல் யானையை விரட்டி அடிக்க அந்த யானை அவரைத் தாக்கி உள்ளது.   அவர் வன ஊழியர்களிடம் தகவல் அளித்துள்ளார்.  அங்கு வந்த வன ஊழியர்கள் பட்டாசு வெடித்து அந்த யானையை விரட்டி உள்ளனர்.   பிறகு அருகில் உள்ள ஏரியில் மணலில் சிக்கிய அந்த யானையை மீட்டுள்ளனர்.   நடக்க முடியாத அந்தக் குட்டி யானையை ஒரு வன ஊழியர் தன் தோளில் சுமந்து அருகில் யானைகள் இருந்த கூட்டத்தில் விட்டு விட்டு வந்துள்ளனர்.

ஆனால் அந்த யானைக் குட்டியின் தாய் அங்கு இல்லாததால் வன அலுவலகத்துக்கு யானைக் குட்டி தானாகவே திரும்பி வந்து விட்டது.   அந்த யானைக்கு இரு நாட்கள் உணவளித்து அதை ஊழியர்கள் பாதுகாத்து வந்துள்ளனர்.    இந்நிலையில் அந்த தாய் யானை  குட்டியை தேடி அலுவலகத்துக்கு வந்துள்ளது.  தாயைக் கண்டதும் குட்டியும் ஓடிச் சென்று அதனுடன் கொஞ்சி விளையாடி உள்ளது.   அதன் பிறகு ஊழியர்கள் யானையையும் அதன் குட்டியையும் அதன் கூட்டத்துடன் சேர்த்துள்ளனர்.