Random image

போலி ஆவண மோசடி: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு தலா 9 ஆண்டுகள் சிறை

சென்னை:

போலி  ஆவணங்களை சமர்பித்து வங்கியில் மோசடி செய்தது தொடர்பான வழக்கில், ஒரே குடும்பத்தை சேர்ந்த  5 பேருக்கு தலா 9 ஆண்டுகள் சிறை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது.

சென்னை பாரிமுனை தம்பு செட்டி தெருவில்  கர்நாடகா வங்கி  ஜார்ஜ் டவுன் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில், தண்டையார்பேட்டையில் வசிக்கும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர், சுரேஷ்குமார், போத்தன்ராஜ், ஜான்சிபாய், ரத்தன்ராஜ் ஆகியோர் போலி ஆவணங்களை சமர்ப்பித்து, ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் கடன் பெற்று மோசடி செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு சென்னை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணைகள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது, போலி ஆவணங்கள் கொடுத்து மோசடி செய்தது உறுதிப்படுத்தப்பட்து. அதையடுத்து, மோசடி செய்த குடும்பத்தினர் 5 பேரும் தலா 9 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், தலா 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி ராஜு தீர்ப்பளித்தார்.

இதேபோன்று, போலி ஆவணங்களை சமர்பித்து,திருவல்லிக்கேணி பேங்க் ஆப் பரோடா வங்கியில், 92 லட்சம் ரூபாய் கடன்பெற்று மோசடி செய்த கிருஷ்ணன், அவரது மனைவி லட்சுமிக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து அல்லிக்குளம் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராஜூ தீர்ப்பளித்தார்