தமிழ் தொலைக்காட்சிகளில் சித்த மருத்துவர் என்ற பெயரில் போலி மருத்துவர்கள்: அரசு நோட்டீஸ்

சென்னை:

மிழ் தொலைக்காட்சிகளில்  சித்த மருத்துவர் என்ற பெயரில் போலி மருத்துவர்கள் பல்வேறு நோய்கள் குறித்தும், அதற்கு நிவாரணமாக  மருந்துகள் கொடுப்பதும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இதுகுறித்து விளக்கம் அளிக்கவும், இதுபோன்ற நிகர்ச்சிகளை ரத்து செய்ய வேண்டும் என்று தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு அரசு  சித்த மருத்துவக் கல்லூரி பதிவாளர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

ஊடகங்களில் வெளியாகும் சித்த மருத்துவ குறிப்புகள் நிகழ்ச்சி

தமிழகத்தில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிரபலமான தொலைக்காட்சிகளில் தாடி வைத்துக் கொண்டு அந்த கால சித்தர்கள் போல வேடம்பூண்டு பலர் சித்த மருத்துவம் குறித்து பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றனர். தினசரி காலையில் இந்த நிகழ்ச்சிகள் பெரும்பாலான ஊடகங்களில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஒருசில ஊடகங்களில் சித்த மருத்துவம் என்ற பெயரில் பாலியல் தொடர்பான நிகழ்ச்சியும் இரவு நேரங்களில் அப்பட்டமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

நோய்கள் குறித்தும், அதற்கு நிவாரணம் குறித்தும் அவர்கள் கூறும் தகவல்கள் எந்த அளவுக்கு உண்மை என்பது கேள்விக்குறியாகி உள்ள நிலையில், நோய்களுக்கு நிவாரணம் கூறும் அவர்கள்  சித்த மருத்துவம் படித்தவர்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பலர் பரம்பரை வைத்தியம் என்ற பெயரில் ஏதேதோ உளறிக்கொண்டு, நோய்களுக்கான தீர்வுகள் குறித்து எந்தவித உறுதியும் அளிக்க முடியாத அவர்களின்  மருத்துவக்குறிப்புகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்து உள்ளன. பல புகார்களும் பதிவாகி உள்ளன. அவர்கள் வழங்கும் மருந்துகள் பல்வேறு உடல்ப் பிரச்சினைகளை உருவாக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தமிழ் தொலைக்காட்சிகளில் சித்த மருத்துவர் என்ற அடையாளத்துடன் தீராத வியாதிகளுக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி போலி மருத்துவர்கள் பங்கேற்பதால் அந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்ய வேண்டும் என தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு, அரசு சித்த மருத்துவக் கல்லூரி பதிவாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.