வெளியுறவு செயலாளர் நாளை அமெரிக்கா பயணம்

--

டெல்லி:

நான்கு நாள் பயணமாக மத்திய வெளியுறவு துறை செயலாளர் ஜெய்சங்கர் நாளை அமெரிக்கா செல்கிறார். இந்தியர்களுக்கு வழங்கப்படும் பணி விசா ஹெச் பி1 மற்றும் அமெரிக்காவில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து அந்நாட்டு அதிகாரிகளுடன் ஜெய்சங்கள் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், அவர் உள்நாட்டு மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து அதிபர் டிரம்பின் மூத்த நிர்வாக அதிகாரிகளுடன் பேசுவார் என்று அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் பவுல் ரியான், சிறுபான்மை தலைவர் நான்சி பெலோசி உள்ளிட்டோரை சந்தித்து பேசும் திட்டமும் உள்ளது.

இந்திய தகவல்தொழில் நுட்ப துறை நிறுவனங்கள் அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கு வழங்கும் பங்களிப்பு குறித்து ஜெய்சங்கர் எடுத்துரைப்பார் என்று நம்பப்படுகிறது. சமீபத்தில் அங்குள்ள பாரில் நடந்த இனவெறி தாக்குதலில் இந்திய பொறியாளர் ஒருவர் கொல்லப்பட்டார். அதனால் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தவள்ளார்.

வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் போன் மூலம் அமெரிக்க செயலாளருடன் நடத்திய உரையாடலை தொடர்ந்தே ஜெய்சங்கரின் அமெரிக்க பயணம் உறுதியானது. கடந்த மாதம் டிரம்ப் பதவி ஏற்ற பிறகு அவருடன் மோடி உரையாடினர். இருவரும் பரஸ்பரமாக நாடுகளுக்கு விஜயம் செய்ய அழைப்பு விடுத்துக் கொண்டனர். டிரம்ப் பதவி ஏற்ற பிறகு அவர் உரையாடிய 5வது உலகத் தலைவர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.