முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வி.டி.கோபாலன்  காலமானார்.. திமுக தலைவர் இரங்கல்…

சென்னை:

முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலும், மூத்த வழக்கறிஞருமான  வி.டி.கோபாலன்  காலமானார்.  அவரது மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞரான  வி. டி. கோபாலன்  மத்திய அரசின் கூடுதல் சொலிசிடர் ஜெனரலாக பணியாற்றி வந்தவர், கடந்த 2008ம் ஆண்டு  தனிப்பட்ட காரணங்களுக்காக அரசு பதவியை ராஜினாமா செய்தார். வயது முதிர்வு காரணமாக  திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவரது மறைவுக்கு அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியூட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது,

முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலும், மூத்த வழக்கறிஞருமான திரு. வி.டி.கோபாலன் அவர்கள் மறைவெய்தினார் என்ற அதிர்ச்சிச் செய்தி கேட்டு சொல்லொணாத் துயரத்திற்கு உள்ளானேன். அவரது மறைவிற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.வழக்கறிஞர் சமுதாயத்தில் ‘மரகதமணி’ போல் ஒளி வீசிக் கொண்டிருந்த அவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு மிக நெருக்கமானவர். சட்ட ஆலோசனைகள் கூறும் நுண்ணறிவுமிக்க வழக்கறிஞர் மட்டுமல்ல- திராவிட முன்னேற்றக் கழகம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் பங்கேற்றிருந்த போது- கலைஞர் அவர்களாலும், கலைஞரின் மனச்சாட்சியான மறைந்த முரசொலி மாறன் அவர்களாலும் பரிந்துரைக்கப்பட்டு- அவரது திறமைக்காக மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டவர். சட்ட நுணுக்கங்களுடன் மிகச் சிறந்த வாதங்களை எடுத்து வைக்கும் அவர் மோட்டார் வாகனச் சட்டம், அரசியல் சட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய சட்டங்களின் கீழான வழக்குகளில் திறமையுடன் வாதாடியவர்.

என்னிடம் மிகவும் அன்பு பாராட்டியவரும், நான் மதிக்கும் வழக்கறிஞர்களில் ஒருவருமான திரு. வி.டி.கோபாலன் அவர்களின் மறைவு வழக்கறிஞர்கள் சமுதாயத்திற்கும்- நீதி பரிபாலனத்திற்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், வழக்கறிஞர்களுக்கும், நீதியரசர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.‘

இவ்வாறு கூறியுள்ளார்.