Random image

பெண்மணி கையில் தமிழக ஆட்சி சென்றபோதே ஊழல் தொடங்கியது: அதிமுக முன்னாள் அமைச்சர் அதிரடி குற்றச்சாட்டு

 சென்னை:

எம்ஜிஆர் ஆட்சியின்போது அமைச்சராக இருந்தவரும், ஜெயலலிதாவுக்கு எதிராக அரசியல் செய்தவரும், எம்ஜிஆர் கழக நிர்வாகியுமான இராம. வீரப்பன் தற்போதைய மாநில அரசு மற்றும் ஜெயலலிதா குறித்து கடுமையாக தாக்கி பேசினார்.

தமிழக ஆட்சி எப்போது  ஒரு பெண்மணியின் கையில் சென்றதோ, அன்றே கோடி கோடியாக லஞ்சம் வாங்கும் பழக்கம் தொடங்கியது என்று மறைந்த முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளராக இருந்தவருமான  ஜெயலலிதாவை கடுமையாக தாக்கி பேசினார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும்  திரைப்பட தயாரிப்பாளரான இராம. வீரப்பன் இன்று சென்னை கோபாலபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் கழக அலுவலகம் மற்றும் சத்யா மூவிஸ் அலவலகத்தில்  செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது,

தற்போது தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும்  குட்கா வழக்கில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக தண்டிக்க வேண்டும். கடுமையாக தண்டனை கொடுத்து சிறையில் அடைக்க வேண்டும்.  குட்கா வழக்கு தமிழகத்திற்கு துரதிஷ்டமா இல்லை அரசியலுக்கு துரதிஷ்டமா என்று தெரியவில்லை என்று கூறினார்.

எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு என்று ஒரு பெண்மணி கைக்கு ஆட்சிக்கு வந்ததோ அன்றே கோடி கோடியாக பணம் வாங்கும் பழக்கம் வந்து விட்டது என மறைமுகமாக ஜெயலலிதாவை  குற்றம் சாட்டினார்.

குற்றம் யார் செய்தாலும் குற்றம் தானே, அது அலுவலக கடைசி நிலை அதிகாரியாக இருந்தாலும் சரி காவல்துறை உயர் அதிகாரியாக இருந்தாலும் சரி நிச்சயமாக அவர்களுக்கும் கடுமையான தண்டனை கொடுக்கப்பட்ட வேண்டும் என்றார்.

பாஜகவை தான் தனிப்பட்ட முறையில் குற்றம்சாட்ட விரும்பவில்லை என்ற வீரப்பன், மத்தியில் ஆளும் ஆட்சி இந்திய மக்களுக்கு சாதகமாக செயல்படவில்லை, மக்களை அழிக்கும் நோக்கில் செயல்படுகிறது எனவும் பகிரங்கமாக குற்றச்சாட்டினார்.

சுயாட்சி என்பதா என்பதே திமுக காலத்தில் தான் கொண்டுவரப்பட்டது, தமிழகத்தில் சுயாட்சி நடைபெறுகிறதா என்பதே தெரியவில்லை .

இவ்வாறு அவர் கூறினார்.

அதிமுகவை தொடங்கிய எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக நியமனம் செய்யப்பட்டதில் இருந்தே அதிமுவில் ஜெவுக்கும் வீரப்பனுக்கும் இடையே முட்டல் மோதல் தொடர்ந்து வந்தது. எம்ஜிஆர் உயிரோடு இருக்கும் வரை இருவரையும் சமாளித்து வந்தார்.

ஆனால், எம்ஜிஆர் மறைவின் போது, அவரது உடல் ராணுவ வண்டியில் ஏற்றப்பட்டபோது, உடன் செல்ல இருந்த ஜெ.வை அங்கிருந்து விரட்டியது ராம வீரப்பன் என்று கூறப்பட்டது. அதைத்தொடர்ந்து எம்ஜிஆரின் மனைவியை முதல்வராக உட்கார வைத்ததும் முன்னாள் இராம. வீரப்பன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.